செய்திகள்
ஜேக்கப் ஜூமா

தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா மருத்துவமனையில் அனுமதி

Published On 2021-08-06 19:55 GMT   |   Update On 2021-08-06 19:55 GMT
தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவின் ஆதரவாளா்கள் நடத்திய வன்முறை போராட்டத்தில் பலா் உயிரிழந்தனா்.
டர்பன்:

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா. இவர் மீது ஏராளமான ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு விசாரணையில் அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்ததால் அவருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த அந்நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜூன் மாதம் முதல் வாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை கண்டித்து தென்ஆப்பிரிக்கா முழுவதும் அவரது ஆதரவாளர்கள் பெரிய அளவில் வன்முறைகளில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக சிறை அதிகாரி சிங்கபாகோ நச்மாலோ கூறுகையில், ‘‘சிறையில் நடக்கும் வழக்கமான மருத்துவ பரிசோதனை ஜேக்கப் ஜூமாவை மருத்துவமனையில் சேர்க்க தூண்டியது. சிறையில் முன்னாள் அதிபரின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய ராணுவ சுகாதார சேவையின் ஈடுபாடு தேவைப்படுகிறது’’ என்றார். 

அதேவேளையில், ஜேக்கப் ஜூமா உடலில் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது? அவரின் தற்போதைய நிலை என்ன? என்கிற தகவல்கள் வெளியாகவில்லை.
Tags:    

Similar News