செய்திகள்
விநாயகர் சிலைகள்

சென்னை உள்பட பல இடங்களில் தடையை மீறி விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டன- பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை

Published On 2021-09-10 08:31 GMT   |   Update On 2021-09-10 08:31 GMT
கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை 2-வது ஆண்டாக விதித்துள்ளது. கடந்த ஆண்டும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

சென்னை:

விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் பெரிய அளவிலான சிலைகளை நிறுவி வழிபாடு நடத்துவார்கள்.

ஒரு வாரத்திற்கு பிறகு இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். குறிப்பாக சென்னையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்ச்சி திருவிழா போல நடைபெறும்.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை 2-வது ஆண்டாக விதித்துள்ளது. கடந்த ஆண்டும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

கொரோனா இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் இந்த ஆண்டும் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்யக் கூடாது என தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்தநிலையில் இன்று சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தடையை மீறி விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டன.

திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டையில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் ஒவ்வொரு ஆண்டும் மிகப் பெரிய விநாயகர் சிலைகளை வைத்து இந்து முன்னணியினர் வழிபாடு செய்வார்கள். மறைந்த இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் இங்கிருந்து தான் தடையை மீறி ஊர்வலமும் செல்வார். அதையொட்டி ஆண்டு தோறும் திருவல்லிக்கேணியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம்.

தமிழக அரசு தடை விதித்து இருந்த போதிலும் இந்து முன்னணியினர் சார்பில் இன்று காலை 6.30 மணியளயில் திருவட்டீஸ்வரன் பேட்டையில் 3.5 அடி விநாயகர் சிலையை வழிபாட்டுக்காக வைத்தனர்.

 


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் மேகநாதன், மணிகண்டன், இந்து முன்னணி சென்னை மாநகர தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விநாயகர் சிலைக்கு முன்பு பழங்கள், பொரி உள்ளிட்ட அனைத்து பூஜை பொருட்களை வைத்து பூஜையும் செய்தனர். விநாயகருக்கு பெரிய மாலையும் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்து முன்னணியினர் சிலைக்கு பூஜைகளை செய்தனர்.

சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலக வாசலிலும் விநாயகர் சிலையை வைத்து இந்து முன்னணியினர் வழிபாடு நடத்தினார்கள்.

பாரத் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சென்னையில் 21 இடங்களில் சந்தன பிள்ளையாரை வைத்து வழிபாடு நடத்தி இருப்பதாக அந்த அமைப்பின் மாநில தலைவர் பிரபு தெரிவித்தார்.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் சந்தன பிள்ளையாரை வழிபாடு செய்த பின்னர் அதன் மீது தண்ணீர் தெளித்து பொது மக்களுக்கு பிரசாதமாக கொடுக்க முடிவு செய்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேபோன்று தமிழகத்தில் பல்வேறு வெளி மாவட்டங்களிலும் தடையை மீறி பொது இடத்தில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்து முன்னணி சார்பில் சிலைகளை வைத்து அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் வழிபாடு செய்தனர்.

அதுபோன்று வைக்கப்பட்ட சிலைகளை உடனடியாக சென்று போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

 


தஞ்சை சீனிவாசபுரம் பகுதியில் இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈசனசிவம் தலைமையில் நிர்வாகிகள் தடையை மீறி பொது இடத்தில் 4 அடி உயர விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு சிறப்பு பூஜை செய்தனர்.

இது குறித்து தகவலறிந்ததும் போலீசார் விரைந்து சென்று எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து விநாயகர் சிலையை பறிமுதல் செய்த போலீசார் அதனை அருகில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு பாதுகாப்புடன் எடுத்து சென்று வைத்தனர்.

திருச்சி அரியமங்கலம் ராணி அம்மையார் தெருவில் இந்து முன்னணி சார்பில் 8 அடி உயர விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று சிலையை எடுக்க சொல்லி அறிவுறுத்தினார்கள். இதையடுத்து விநாயகர் சிலை அப்பகுதியில் உள்ள பா.ஜ.க. பிரமுகர் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.

இதேபோன்று திருச்சி மாநகரில் உறையூர், ஸ்ரீரங்கம், பொன்மலை உள்ளிட்ட பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் தடையை மீறி இந்து முன்னணியினர் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்தனர்.

இந்து முன்னணி சார்பில் கரூர் பசுபதீஸ்வரர் கோயில் முன்பு நேற்று நள்ளிரவு விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கரூர் நகர போலீசார் விநாயகர் சிலையை அகற்ற முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் விநாயகர் சிலையின் தும்பிக்கை சேதமடைந்தது.

கரூர் வ.உ.சி. தெருவிலும் விநாயகர் சிலையை வைக்க முயன்ற இந்து முன்னணியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வைக்கப்பட்ட 2 விநாயகர் சிலைகளையும் கைப்பற்றிய போலீசார் கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் பாதுகாப்பாக வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வடகரை முருகன் கோவில் அருகே இந்து முன்னணியினர் தடையை மீறி விநாயகர் சிலை வைத்தனர். பின்னர் கேட்டுக்கொண்டதன் பேரில் அந்த கோவில் வளாகத்திற்குள் விநாயகர் சிலை எடுத்து சென்று வைக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ராமத்தேவர் தெருவில் தடையை மீறி 2 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. உசிலம்பட்டி போலீசார் விரைந்து சென்று 2 சிலைகளையும் பறிமுதல் செய்தனர்.

உசிலம்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் சரக்கு வாகனத்தில் 2 பெரிய விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த 2 விநாயகர் சிலைகளையும் பறிமுதல் செய்தனர்.

நெல்லை தச்சநல்லூர் பெருமாள் கோவில் முன்பு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது.

அந்த சிலையையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது போலீசாருக்கும் இந்து முன்னணியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

பாளையங்கோட்டை தெற்கு பஜார், வண்ணார்பேட்டை சாலைத்தெரு, டவுன் செண்பகம் பிள்ளை தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்காக வைக்கப்பட்டன. இந்த சிலைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பஸ் நிலையம் அருகே இந்து முன்னணியினர் விநாயகர் சிலையை வைத்து வழிபட கொண்டு வந்தனர்.

இதை அறிந்த போலீசார் சிறிது தூரத்துக்கு முன்பே அவர்களை தடுத்து நிறுத்தி விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை. எடுத்து செல்லுங்கள் என கூறினர். ஆனால் அவர்கள் தடையை மீறி சிலை வைக்க முயற்சி செய்தனர்.

இதையடுத்து விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்து முன்னணி நிர்வாகிகள் 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் எல்லை பிடாரி அம்மன் கோவில் அருகே ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பெரிய விநாயகர் சிலையை வைப்பதற்காக எடுத்து வந்தனர். போலீசார் அவர்களை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் போலீஸ் நடவடிக்கையை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள்.

இப்படி தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் விநாயகர் சிலைகள் இன்று காலையிலேயே வைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதை தடுப்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் ரத்து - காரணம் இதுதான்

Tags:    

Similar News