செய்திகள்
க்ரைம்.

பின்னலாடைகளை ஏற்றி செல்லும் லாரிகளில் இருந்து டீசலை திருடும் கும்பல்

Published On 2021-10-10 07:41 GMT   |   Update On 2021-10-10 07:41 GMT
மோட்டார், பிளாஸ்டிக் கேன் சகிதமாக ஆட்டோவில் சிலர் பின் தொடர்கின்றனர்.
திருப்பூர்:

திருப்பூரில் இருந்து சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கொச்சி போன்ற பகுதிகளுக்கு வாரந்தோறும் ஆயிரம் லாரிகளில் பின்னலாடைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. 

இப்பணியில் 500 டிரைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.திருப்பூரில் இருந்து சேலம் வழியாக சென்னை செல்ல 10மணி நேரமாகிறது. பெரும்பாலான லாரிகள் இரவில் புறப்பட்டு அதிகாலை சரக்கை கொண்டு சேர்ப்பவையாக உள்ளது. 400 கி.மீ., அதிகமாக இருப்பதால் குறைந்த பட்சம் இரண்டு இடங்களில் நிறுத்தி டிரைவர் சற்று ஓய்வெடுத்து விட்டு பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் பை-பாசில் தனியே லாரிகளை நிறுத்தினால் பொருட்களை திருடி செல்லும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.

இதுகுறித்து டிரைவர்கள் கூறுகையில், 

மோட்டார், பிளாஸ்டிக் கேன் சகிதமாக ஆட்டோவில் சிலர் பின் தொடர்கின்றனர். லாரியை நிறுத்தி டிரைவர் அசந்து தூங்கிவிட்டால் 5 நிமிடத்தில் 500 லிட்டர் டீசலை கூட உறிஞ்சி விடுகின்றனர். முன்பு கடைகள் முன் நிறுத்தி தூங்கி வந்தோம். 

கொரோனாவுக்கு பின் தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு நேர கடைகள் செயல்படுவதில்லை. அதனால் தூங்க வழியில்லை. சேலம் பை-பாஸ் சாலையில் தனியே லாரியை நிறுத்தவே பயமாக உள்ளது என்றனர்.

எனவே சுங்கச்சாவடி அருகில் கேமரா கண்காணிப்புடன் கூடிய ஓய்வறை அமைத்தால்  டிரைவர்கள் லாரியில் நிறுத்தி லாரியிலேயே ஓய்வெடுத்து கொள்வர். தமிழக அரசு இதற்கான ஏற்பாட்டை செய்து டிரைவர்களின் உடல்நலத்தை காக்க வேண்டும். விபத்தை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News