செய்திகள்
பிரகாஷ் ஜவடேகர்

பள்ளிக்கல்வியை வலுப்படுத்த ரூ.5,700 கோடியில் புதிய திட்டம் - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Published On 2020-10-14 21:04 GMT   |   Update On 2020-10-14 21:04 GMT
பள்ளிக்கல்வி முறையை வலுப்படுத்த ரூ.5 ஆயிரத்து 718 கோடி செலவிலான புதிய திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு அமல்படுத்த தொடங்கி விட்டது.

அதன் ஒரு பகுதியாக, மாநிலங்களின் பள்ளிக்கல்வி முறையை வலுப்படுத்த ‘ஸ்டார்ஸ்’ என்ற புதிய திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

உலக வங்கி ஆதரவுடன் நிறைவேற்றப்படும் இத்திட்டத்துக்கு ரூ.5 ஆயிரத்து 718 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறையால் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.

இமாசலபிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம், மத்தியபிரதேசம், கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். பள்ளிக்கல்வி முறையை மேம்படுத்தி, நல்ல பலன்களை விளைவிக்க மாநிலங்களுக்கு உதவுவதே இதன் நோக்கம்.

தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கான ரூ.520 கோடி சிறப்பு நிதிதொகுப்புக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இந்த 2 யூனியன் பிரதேசங்களில் 10 லட்சத்து 58 ஆயிரம் பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிறப்பு நிதிதொகுப்பில் இருந்து பலன்கள் அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News