செய்திகள்
திலீப் கோஷ்

மேற்குவங்காளத்தை குஜராத்தாக மாற்ற நினைக்கிறோம் - பாஜக தலைவர் பேச்சு

Published On 2020-11-17 11:25 GMT   |   Update On 2020-11-17 11:25 GMT
மேற்குவங்காளத்தை குஜராத்தாக மாற்ற நினைப்பதாக மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா: 

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபை தேர்தல் 2021-ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளபோதும் அரசியல் கட்சியினர் தற்போது முதலே பிரசார கூட்டங்களை நடத்தத்தொடங்கியுள்ளனர்.

அந்த சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட உள்ளது.

இந்த முறை மேற்குவங்காளத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக தற்போதே தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் ஈடுபடத்தொடங்கிவிட்டது. 

அம்மாநில பாஜக தலைவரான திலீப் கோஷும் தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு கட்சியின் பலத்தை  அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

முன்னதாக, மேற்குவங்காளத்தை குஜராத்தாக (குஜராத் கலவரம்) மாற்ற முயற்சிகள் நடைபெற்றுவருவதாக அம்மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி பாஜக மீது விமர்சனம் செய்திருந்தார். 

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் இன்று பேசிய மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ், ‘இந்தமுறை மேற்குவங்காளத்தை குஜராத்தாக மாற்ற முயற்சிகள் நடைபெறுவதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். நான் சொல்கிறேன். ஆம் நாங்கள் குஜராத்தாக மாற்ற நினைக்கிறோம். 

அப்போதுதான் மேற்குவங்காள மக்கள் மேற்குவங்காளத்திலேயே வேலைவாய்ப்பை பெறமுடியும். மேலும், வேலைவாய்ப்பு தேடி குஜராத்திற்கு இனியும் செல்லவேண்டிய அவசியம் ஏற்படாது’ என்றார்.

Tags:    

Similar News