செய்திகள்
தீவிரவாதி

6 தீவிரவாதிகள் கைது: ஆயுத பூஜை- தீபாவளி பண்டிகைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

Published On 2021-09-15 09:25 GMT   |   Update On 2021-09-15 10:03 GMT
நாட்டில் எந்த மாநிலத்தில் பயங்கரவாதிகள் பிடிபட்டாலும் உடனடியாக அனைத்து மாநிலங்களுக்கும் உஷார் தகவல்கள் அனுப்பப்படும் என்று போலீஸ் அதிகாரி கூறினார்.
சென்னை:

வட மாநிலங்களில் அடுத்த மாதம் தசரா திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை சீர்குலைக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்த பயங்கரவாதிகள் சிலர் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து டெல்லியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தாக்குதலுக்கு திட்டமிட்ட 6 பயங்கரவாதிகள் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்பதும், நாட்டின் பல மாநிலங்களில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டு இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி உள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் அடுத்தடுத்து வர உள்ள பண்டிகை நாட்களில் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந் தேதி ஆயுத பூஜையும், நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இப்போதில் இருந்தே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீசுக்கு, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை நாட்களிலும் கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்றே தெரிகிறது. இருப்பினும் பண்டிகையை எப்போதும் போல உற்சாகமாக கொண்டாட மக்கள் தயாராகி வருகிறார்கள். எனவே இந்த பண்டிகை நாட்களில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் மிகுந்த கவனமுடன் செயல்படத் தொடங்கி உள்ளன.

அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள ஆயுத பூஜைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. ஆயுத பூஜையையொட்டி மார்க்கெட்டுகளில் பூஜை பொருட்கள் வாங்குவதற்கு தொழில் நடத்துபவர்களும், பொதுமக்களும் அதிகளவில் கூடுவார்கள்.

இதனை பயன்படுத்தி பயங்கரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக ஆயுத பூஜைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே அனைத்து மார்க்கெட்டுகளிலும் தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.



தீபாவளி பண்டிகையும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுவது உண்டு. கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை மக்கள் மிகுந்த உற்சாகத்துடனேயே கொண்டாடினார்கள். இந்த ஆண்டும் தீபாவளி கொண்டாட்டத்திற்கு மக்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள்.

தீபாவளியையொட்டி பொதுமக்கள் நடமாட்டம் வெளி இடங்களில் அதிகளவில் இருக்கும் என்பதால் அப்போதும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பண்டிகை நாட்களையொட்டி பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பஸ், ரெயில்களிலும் பயணம் மேற்கொள்வார்கள். அதனை கருத்தில் கொண்டு ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களிலும் தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கு இடமாக யாராவது நடமாடினால் அதுபற்றி உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் பொதுமக்களை கேட்டுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘நாட்டில் எந்த மாநிலத்தில் பயங்கரவாதிகள் பிடிபட்டாலும் உடனடியாக அனைத்து மாநிலங்களுக்கும் உஷார் தகவல்கள் அனுப்பப்படும். அந்த வகையில் தமிழகத்திலும் பண்டிகை நாட்களில் மிகுந்த பாதுகாப்போடு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் பிடிபட்டுள்ள பயங்கரவாதிகளுடன் தமிழகத்தில் யாரும் தொடர்பில் இல்லை. இருப்பினும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வரும் நாட்களில் தீவிரமாக மேற்கொள்ளப்படும்’’ என்றார்.


Tags:    

Similar News