ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்

சொர்க்க வாசல் திறப்பு: ஸ்ரீரங்கம் கோவிலில் ஆன்-லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

Published On 2020-12-23 06:44 GMT   |   Update On 2020-12-23 06:44 GMT
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பன்று ஆன்-லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்சி :

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைணவ திருத்தலங்கள் 108-ல் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் எனவும் ஆழ்வார்கள் பதின்மர்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருத்தலமாக சிறப்புடன் விளங்குகிறது.

இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருநாள் கடந்த 14-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து ஜனவரி (2021) 4-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் என்னும் சொர்க்கவாசல் திறப்பு வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 4.45 மணிக்கு நடைபெறவுள்ளது.

இத்திருநாட்களில் கொரோனா நுண்கிருமி தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர காவல்துறையினர் ஆகியோரின் ஆலோசனையின்படி, நாளை (24-ந் தேதி) மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் (25-ந் தேதி) காலை 8 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் முக்கிய திருநாளான 25-ந் தேதி பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் திறப்பன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பரமபதவாசல் செல்வதற்கும், மூலவர் முத்தங்கி சேவை சேவிக்க இலவச தரிசன வழி மற்றும் ரூ.250-கட்டண சீட்டு வழியில் செல்வதற்கு ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

வைகுண்ட ஏகாதசி திருவிழா நாட்களில் (வருகிற ஜனவரி 4-ந் தேதி முடிய) பக்தர்கள் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டும், விரைவாக தரிசனம் செய்திட ஏதுவாக மூலவர் முத்தங்கி சேவை, பரமபதவாசல் ஆகியவற்றிற்கு கோயில் இணைதளமான www.srirangam.org-ல் கட்டணமில்லா தரிசனம் மற்றும் விரைவு வழி தரிசனம் (ரூ.250) ஆகியவற்றிக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகைதர பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வசதியினை பயன்படுத்தி முன்பதிவு செய்த நேரத்திலிருந்து அரை மணி நேரத்திற்கு முன்பாக வருகைதர வேண்டும்.
வைகுண்ட ஏகாதசி
திருவிழா நிகழ்ச்சிகளை srirangam temple என்ற You Tube Channel-லிலும் உள்ளூர் தொலைக்காட்சியிலும் காணலாம்.

மேற்கண்ட தகவலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் நிர்வாகம் தரப்பிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை போலீஸ் கமிஷனர் லோகநாதன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, போலீஸ் துணை கமிஷனர்கள் பவன் குமார் ரெட்டி, வேதரத்தினம், ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி, கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News