செய்திகள்
மும்பையில் விநாயகர் ஊர்வலம்

மும்பையில் கோலாகலமாக தொடங்கியது விநாயகர் ஊர்வலம்

Published On 2019-09-13 03:54 GMT   |   Update On 2019-09-13 03:54 GMT
மும்பையில் இன்று விநாயகர் சதுர்த்தியின் நிறைவாக விநாயகர் ஊர்வலம் நடைபெறுகிறது. ஊர்வலத்தின் நிறைவில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.
மும்பை:

விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாட்டின் பிற பகுதிகளை காட்டிலும் மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மிகுந்த உற்சாகத்துடனும், பிரமாண்டமான முறையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்ந்து 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மண்டல்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு 10 நாட்கள் வரை சிறப்பு பூஜை செய்யப்பட்டு, 11-வது நாளில் ஆனந்த சதுர்த்தி எனப்படும் சிலை கரைப்பு விழா நடைபெறுகிறது.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவு நிகழ்வான, விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. விநாயகர் ஊர்வலம் இன்று காலையில் தொடங்கியது.



அனைத்து பகுதிகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்து வரப்படுகின்றன. ஊர்வலத்தின் நிறைவில், விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.

மும்பையில் இன்று காலை முதலே விநாயகர் ஊர்வலம் களைகட்டியுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

மும்பையில் சிலைகளை கரைப்பதற்கு 129 இடங்களில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக, விநாயகர் ஊர்வலத்திற்கு தனி பாதை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. பொது வாகன போக்குவரத்தும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மும்பை காவல்துறை விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது.

மும்பையில் விநாயகர் ஊர்வலத்தில் பல லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர காவல் படையினர் கடற்பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றனர். மும்பை முழுவதும் 5000க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் விநாயகர் ஊர்வலம் கண்காணிக்கப்படுகிறது. 
Tags:    

Similar News