செய்திகள்
மாநில மனித உரிமை ஆணையம்

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இயக்கப்படும் அரசு பஸ்கள்- மனித உரிமை ஆணையத்தில் புகார்

Published On 2020-10-07 03:15 GMT   |   Update On 2020-10-07 03:15 GMT
சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

கொரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து கடந்த மாதம் 7-ந் தேதி முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், அனைத்து பஸ்களிலும் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளுடன் பஸ்களை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆனால், தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 16-ந் தேதி விழுப்புரத்தில் இருந்து அரசு பஸ்சில் ஓசூர் சென்றேன். கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ள போதிலும் நான் பயணம் செய்த அரசு பஸ்சில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை.

தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் இதே நிலை தான் உள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பயணிகள் அனைத்து இருக்கைகளிலும் அமர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

பல இடங்களில் பயணிகள் முக கவசம் அணியாமல் பயணிக்க அனுமதிக்கின்றனர். பஸ்சில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் முறையாக கிருமிநாசினி பயன்படுத்த அறிவுறுத்தப்படுவது இல்லை.

பயணிகளின் இருக்கை மற்றும் பஸ்சின் உட்பகுதி கிருமிநாசினி மூலம் முறையாக அவ்வப்போது சுத்தப்படுத்துவது இல்லை. பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது இல்லை. இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வர உள்ளது.
Tags:    

Similar News