செய்திகள்
கோவை குற்றாலம் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி.

கோவை குற்றாலம் 4 நாட்கள் தற்காலிகமாக மூடல்

Published On 2021-09-09 03:47 GMT   |   Update On 2021-09-09 03:47 GMT
கொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த கேரளத்தின் முக்கிய சுற்றுலா தலமான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி கடந்த 10 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கோவை:

கோவை மாவட்டத்தில் பரவிய கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா தலமான கோவை குற்றாலம் 3 மாதங்களாக மூடப்பட்டிருந்தது.

கொரோனா தொற்று குறைய தொடங்கியதை தொடர்ந்து கடந்த 6-ந்தேதி கோவை குற்றாலம் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படடது.

கோவை குற்றாலம் திறந்ததும், கோவை, பொள்ளாச்சி மட்டுமின்றி அருகே உள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார்கள், மோட்டார் சைக்கிள்களில் படையெடுத்து வந்தனர். அவர்கள் கோவை குற்றால அருவிகளில் குடும்பத்துடன், குளித்து மகிழ்ந்தனர். கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாகவே இருந்தது. வனத்துறையினர் குறிப்பிட்ட நேர இடைவெளியிலேயே மக்களை அனுமதித்து வந்தனர்.

இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் அதிகளவில் தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் நலன் கருதி இன்று முதல் வருகிற 12-ந் தேதி வரை 4 நாட்கள் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று அங்கு வந்த பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளது. கொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த கேரளத்தின் முக்கிய சுற்றுலா தலமான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி கடந்த 10 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இங்கு தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். இந்த நிலையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி நேற்று முதல் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருச்சூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீர்வீழ்ச்சி மூடப்பட்ட தகவல் தெரியாததால் நேற்று ஏராளமானோர் அங்கு வந்திருந்தனர். அவர்கள் வெளியில் வைத்திருந்த அறிவிப்பு பலகையை பார்த்து விட்டு திரும்பி சென்றனர்.
Tags:    

Similar News