செய்திகள்
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்

நாளை பொங்கல் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

Published On 2021-01-13 10:37 GMT   |   Update On 2021-01-13 10:37 GMT
பொங்கல் பண்டிகை நாளை (14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-

உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில், அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எங்களது இதயங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

பொங்கல் திருநாள் அறுவடைத் திருநாள். உழுது பயிரிட்டு வளர்த்துப் பாதுகாத்து அறுவடை செய்து அனைவரும் வயிறார உண்ண உணவு தருபவன் ஏழை விவசாயி. அந்த விவசாயிகளின் வாழ்வு செழித்திட, கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டில் கூடுதல் மழை பொழிந்து, அம்மாவின் வழியில் நடைபெற்று வரும் கழக ஆட்சிக்குப் பெருமை சேர்த்துள்ளது இயற்கை.

சாதி, மத வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவத்துடன், பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதத்தில் கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய விளை பொருட்களை வைத்து, புதுப்பானையில் அரிசியிட்டு, “பொங்கலோ பொங்கல்” என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனை வணங்கி கொண்டாடும் பண்டிகை, பொங்கல் பண்டிகை ஆகும்.

உலகில் மக்கள் பல தொழில்கள் செய்து வந்தாலும், உழவுத் தொழிலே முதன்மையானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் போற்றப்படுகிறது. இத் தகைய பெருமைக்குரிய உழவர்களின் நலனை பேணிக் காத்திடவும், உழவர்களின் வருமானத்தைப் பெருக்கிடவும் பல்வேறு சீரிய திட்டங்களை அம்மாவின் கழக அரசு செயல்படுத்தி வருகிறது.

பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் இன்புற்று கொண்டாடி மகிழ்ந்திட அம்மாவின் கழக அரசு, பொங்கல் பரிசுத் தொகுப்பையும், ரூ.2,500 ரொக்கத்தையும் தமிழக மக்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.

அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில், இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல். இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள் என்று மனதார வாழ்த்தி, அனைவருக்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது வழியில் எங்கள் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக் கொள்கிறோம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

விவசாயிகள் தங்கள் உரிமைக்காக கடும் குளிரிலும் டெல்லி வீதிகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பொங்கல் பண்டிகையின் கதாநாயகர்களான நம் விவசாயிகள் மோடி அரசின் விவசாய விரோதச் சட்டங்களை எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களது குரல் மத்திய அரசுக்கு இதுவரை கேட்க வில்லை.

மறுநாள் தை பிறக்கிறது. தை பிறந்தால் வழியும் பிறக்கும். நம்பிக்கையை விதையுங்கள். நல்லாட்சி மலர இந்த பொங்கல் திருநாள் வழிகாட்டும். பொங்கலிட்டு நீங்கள் வணங்கும் சூரியன், உங்கள் கண்ணீரைத் துடைக்கும் என்ற நம்பிக்‘கை’யோடு சொல்லுங்கள்... பொங்கலோ பொங்கல் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

தமிழர்களின் விருப்பம் போலவே அனைத்துத் தரப்பினரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும்; அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை செழிக்க வேண்டும் என்பது தான் விருப்பம். அதை நிறைவேற்றுவது போன்று நடப்பாண்டில் பொங்கல் பானை பொங்குவதைப் போன்று மக்களின் வாழ்வில் வளங்களும், நலன்களும் பொங்கட்டும்; கரும்பும், சர்க்கரைக் பொங்கலும் இனிப்பதைப் போன்று தமிழர்களின் வாழ்க்கை இனிக்கட்டும்; மஞ்சள் மற்றும் இஞ்சியின் மருத்துவ குணம் கிருமிகளை அழிப்பதைப் போன்று நமது வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அனைத்து நெருக்கடிகளும் விலகட்டும்.


உயிர்களை வாழ வைக்கும் உணவுத் தானியங்களைத் தன் மேனி சிந்திய வியர்வைத் துளிகளால் விளைவித்துத் தரும் வேளாண் பெருங்குடி மக்கள், தாம் தாயாகப் போற்றும் நிலத்துக்கும், கால்நடைச் செல்வங்கட்கும், நன்றி காட்டும் உன்னதப் பெருவிழாதான் தைப்பொங்கல் திருவிழா ஆகும். இதுவே தமிழர்களின் புத்தாண்டின் முதல் நாளும் ஆகும்.

இருள் விலகி தமிழகத்திற்கு விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு தமிழ்ப் பெரும் மக்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:-

வேளாண் திருவிழா வான பொங்கல் திருநாளைத் தமிழ்மக்கள் பூரிப்புடன் கொண்டாட, பெருமுதலாளிகளின் கோரப்பிடிக்குள் சிக்காமல் இத்தொழிலை மீட்டாக வேண்டும். அதற்கு மைய அரசின் வேளாண்சட்டங்களை முற்றாக உதறியெறிய வேண்டும். கடந்த இரு திங்களாகத் தொடரும் விவசாயிகளின் அறப்போராட்டத்திற்கு ஆதர வாகப் போராட தமிழர்களும் பொங்கி எழுவோமென இந்தப் பொங்கல்நாளில் உறுதியேற்போம்!

‘தை பிறந்தால் வழி பிறக்கும்‘ என்கிற நம்பிக்கையுடன், வேளாண் குடிகளான தமிழ்ப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 10 மாத காலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களும், பல்வேறு இன்னல்களுக்கும், துன்பத்துக்கும் உட்பட்ட மக்களும் கொரோனா அச்சத்தில் இருந்து மீளவும், துன்பத்தில் இருந்து விடுபடவும் இப்பொங்கல் தமிழக மக்களுக்கு நல்வழி ஏற்படுத்திக்கொடுக்கும்.

தமிழர்கள் பொங்கல் பண்டிகையில் பொங்கல் வைத்து, இன்புற்று, மகிழ்வோடு வாழவும், தை பிறந்து வழி பிறக்கவும், தமிழர்கள் நல்வாழ்க்கை வாழவும் இறைவன் துணை நிற்க வேண்டி அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:-

விவசாயம் தொழில் அல்ல; நமது வாழ்க்கை முறை என்பதை மனதில் கொண்டு உழவையும், உழவர்களையும், அவர்களுக்கு உற்றத்துணையாக உள்ள உயிர்களையும் கொண்டாடுவோம்.

தை முதல் நாளில் பொங்குகிற மகிழ்ச்சி எப்போதும் இல்லங்களில் நிறைந்திருக்கட்டும். தமிழகத் திற்கு நல்லதொரு விடிவு காலம் பிறந்து, இழந்த பெருமைகளை எல்லாம் மீட்டெடுக்க இந்த நன்னாளில் வழி பிறக்கட்டும். அதன்மூலம் ஒவ்வொருவரிடமும் அன்பும், ஆரோக்கியமும் தழைத்தோங்கட்டும் என வாழ்த்துகிறேன்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:-

தமிழர் திருநாளான தைப்பொங்கல் நன்னாளைக் கொண்டாடும் தமிழ் சொந் தங்கள் அனைவருக்கும் எமது அகங்கனிந்த நல் வாழ்த்துகள்.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கலில் அனைத்து மக்களின் மீதும் அன்பைப் பொழிந்திடும் அக மனப்பான் மையை வளர்த்திட உறுதி ஏற்போம். தைப் பொங்கல் என்பதே அறுவடைத் திருநாளாகும். அந்நாளில் உழவர்களுக்கு உலகம் நன்றி கூறும் நன்மரபைத் தமிழகம் பேணி வந்துள்ளது. உழவர் திருநாளான தமிழர் திருநாளில் விவசாயப் பெருங்குடி மக்களின் கோரிக்கைகள் வெல்ல அனைவரும் அவர்களுடன் நின்று ஆதரவளிப்போம்,

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஒன்று கூடி போற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பொங்கல் திருநாளில் ஒருவருக்கொரு வர் விட்டுக் கொடுத்து, இன் முகத்துடன் அனைவரையும் வரவேற்று ஒற்றுமையுடன் இணைந்து வாழ்வோம். உலகில் பல நாடுகளில் தமிழர்களாய் வாழ்கிறோம். உலகை தமிழால் ஆளுவோம், ஒன்று படுவோம் வென்றெடுப்போம்.

புதிய ஆண்டில் புதிய அத்தியாயம் படைக்க சபதமேற்போம் எனக் கூறி மீண்டும் அனைவரும் புத்தாடை அணிந்து தைப் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடி மகிழ்ந்திட அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தைப்பொங்கல் திருநாள் மிகவும் சிறப்பாக தமிழகத்தில் கொண்டாடப்படுகின்றது. இந்த நாள் தமிழர்களின் உணர்வோடு கலந்த திருநாளாகும். ஆகையால் இது “தமிழர் திருநாள்” என்று தனிப்பெரும் சிறப்புடன் அழைக்கப்படுகின்றது. சாதி, மத வேறுபாடுகளை மறந்து, இன, மொழி பாகுபாடுகளை துறந்து நாம் எல்லோரும் ஓர் இனம், ஒன்றுபட்ட தமிழினம் என்னும் உணர்வோடு இந்த நன்நாளை சிறப்புடன் கொண்டாடி மகிழ்கின்றோம்.

தமிழக மக்கள் அனைவருக்கும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினம் ஆகிய திருநாட்கள் நல்வாழ்த்துக்கள்.

சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

தைப்பொங்கலை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கொண்டாடுவது தமிழருக்கே உரித்தான தனி சிறப்பு. இயற்கையை வணங்கும் தமிழன் விவசாயத் தில் தனக்கு உற்ற துணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் பொங்கல் விழா எடுக்கிறான்.

இந்த நன்னாளில் கார்கால குளிரும் மார்கழிப் பனியும் விலகி வாழ்வில் மாற்றம் வருவது போல் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கி நல்லறம் தழைத்தோங்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழில் அதிபர் வி.ஜி. சந்தோசம்:-

உழவர் பெருமக்கள் இரவும் பகலும் வயல்வெளி யில் பாடுபட்டு நெல்மணிகள், இஞ்சி, மஞ்சள், செங்கரும்பு, செவ்வாழை, காய், கனிகள் யாவற்றையும் விளைவிக்கின்றனர்.

அப்பொருட்களை களத்து மேட்டுக்குக் கொண்டு வந்து, பயிர் விளைச்சலுக்குப் பெருங்காரணமாக இருக் கின்ற, வான்மழையை நினைத்து, அதற்குப் பெரிதும் காரணமாக இருக்கின்ற சூரியனுக்கு புத்தரிசி பொங்கலட்டு, படையல் போட்டு, உழவர்தம் குடும்பத்தினர்களோடு “பொங்கலோ பொங்கல்” என்று குலவியிட்டு வணங் கும் இன்ப நாளாம் இந்தப் பொங்கல் திருநா ளில் உலகமெல்லாம் இந்நாளைக் கொண்டாடும் இனிய நெஞ்சங்களுக்கு என் இன்பப் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ் மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கல் என்றால் நாம் சாப்பிடும் வி‌ஷயமல்ல. பொங்கல் என்பதை நம் கலாசாரத்தில் உழவர் திரு நாளாக கொண்டாடுகிறோம். முக்கியமாக இது விவசா யத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு விழா. இந்நாளில், படித் தவர்களும் இளைஞர்களும் கிராமங்களுக்கு சென்று விவசாயம் எப்படி நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.

நீங்கள் விரும்பினால் ஈஷா விவசாய இயக்கத்தின் மூலம் உங்களுக்கு இயற்கை விவசாயத்தை கற்றுக் கொடுக்க தயாராக உள்ளோம். அதை கற்றுக் கொண்டு நீங்கள் கிராமத் திற்கு சென்று குறைந்தப் பட்சம் ஒரு 10 பேருக்காவது சொல்லி கொடுக்க வேண்டும். இப்படி செய்தால் நாட்டில் ஒரு பெரும் புரட்சியே நடந்துவிடும்.

ஆகவே, இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் உறுதியை தமிழ் மக்கள் அனைவரும் இந்த பொங்கல் திருநாளில் எடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, தமிழ் இளைஞர்கள் இந்த உறுதியை கட்டாயம் எடுக்க வேண்டும்.

திராவிட மனித சங்கிலி நிறுவனர் டாக்டர் செங்கை பத்மநாபன்:-

தமிழக மக்களுக்கு திராவிட மனித சங்கிலி சார்பில் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு விதையை தந்தால் பல விதைகளை தந்து உலக பசி தீர்க்கும் விவசாயிகளின் வாழ்க்கை வளம் பெற எதிர் காலத்தில் இலவசமாக விதை, மின்சாரம், உரம், நீர் வசதி, விவசாயம் சார்ந்த உபகரணங்களுக்கு 50 சதவீத மானியம், மிக்க குறைந்த வட்டியில் கடன் உதவி, மேம்படுத்தப்பட்ட புதிய விவசாய காப்பீடுத் திட்டம் போன்ற அறிவிப்புகளே விவசாயிகளுக்கான உண்மையான பொங்கல் நல்வாழ்த்துக்களாக அமையும்.

மேலும் பொங்கல் வாழ்த்து தெரிவித்த தலைவர்கள் விவரம் வருமாறு:-

திருநாவுக்கரசர் எம்.பி., அன்புமணி ராமதாஸ் எம்.பி., பாரிவேந்தர் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன். கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், இயேசு அழைக்கிறார் நிறுவன தலைவர் பால் தினகரன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து.

Tags:    

Similar News