செய்திகள்
ஊர்க்காவல் படையினர் மற்றும் போலீசாருக்கு பணி ஒதுக்கப்பட்ட போது எடுத்த படம்

6 சட்டமன்ற தொகுதிகளில் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரத்து 400 போலீசார்

Published On 2021-04-05 13:36 GMT   |   Update On 2021-04-05 13:36 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரத்து 400 போலீசார் ஈடுபடுவதாக போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை:

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 8 துணை ராணுவ படை கம்பெனிகள் வந்துள்ளன.

மேலும் மாவட்டத்தில் போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணிக்காக புதுக்கோட்டைக்கு வந்துள்ளனர்.

இந்தநிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் போலீசார் உடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடக்கூடிய ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவ படையினர், தேசிய மாணவர் படையினர் நேற்று புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் வரவழைக்கப்பட்டனர்.

6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பாதுகாப்பு பணிக்கு அவர்கள் பிரித்து அனுப்பப்பட்டனர். அவர்களுடன் வெளிமாநில ஊர்க்காவல் படையினருக்கும் பணி ஒதுக்கப்பட்டது. அவர்களை அழைத்து செல்வதற்காக வேன்கள் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

தேர்தல் பாதுகாப்பு பணி குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் கேட்ட போது கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்திட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 27 இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 406 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

வாக்குச்சாவடி மையங்கள் முன்பும், ரோந்தும் பணியும், நடமாடும் போலீஸ் குழுவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் என பாதுகாப்பு பணி பிரிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவ படையினரும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 125 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பாதுகாப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது''.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News