செய்திகள்
சென்னை ஐகோர்ட்

வாக்காளர் விவரம் கசிந்தது எப்படி? ஆதார் ஆணையம் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

Published On 2021-04-01 08:03 GMT   |   Update On 2021-04-01 08:03 GMT
கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் விவரங்களை சேகரித்ததாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை:

புதுச்சேரியில் வாக்காளர்களின் மொபைல் எண்களை ஆதார் மூலம் சட்டவிரோதமாக பெற்று பாஜகவினர் பிரசாரம் செய்வதாக கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பாஜகவின் இந்த பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருப்பதாக மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாஜக மீதான எஸ்எம்எஸ் பிரசாரம் குறித்த புகாரை விசாரித்து முடிக்கும்வரை புதுச்சேரி சட்டசபை தேர்தலை ஏன் தள்ளி வைக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.



இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் விவரங்களை சேகரித்ததாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.  

ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன்களுக்கு மட்டும் எஸ்எம்எஸ் வந்துள்ளது, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியபிறகும் எஸ்எம்எஸ் மூலம் பாஜக பிரசாரம் செய்தது தீவிரமான தனிமனித உரிமை மீறல் என்று  நீதிபதிகள் கூறினர். 

மேலும் வாக்காளர் விவரங்கள் எப்படி கசிந்தது? என்பது பற்றி ஆதார் ஆணையம் விசாரிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News