செய்திகள்
திருவண்ணாமலை ஒருங்கிணைந்த சேவை மையத்தை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு செய்த போது எடுத்தபடம்.

திருவண்ணாமலையில் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் செயல்பாடு குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2019-09-21 18:15 GMT   |   Update On 2019-09-21 18:15 GMT
திருவண்ணாமலையில் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் செயல்பாடு குறித்து கலெக்டர் கந்தசாமி திடீர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை:

இந்தியாவில் ஒருங்கிணைந்த சேவை மையம் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மையமானது வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைந்த ஆதரவையும், உதவிகளையும் வழங்கி வருகிறது. குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, மனநலம் சார்ந்த பிரச்சினைகள், பாலியல் தொல்லை புகார் மற்றும் பாதுகாப்பு போன்றவைகளுக்கு ‘181’ என்ற பெண்கள் பாதுகாப்பு எண் செயல்பட்டு வருகிறது.

இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ‘நிர்பயா நிதி’ மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதன் மூலம் அவசரகால பதில் மற்றும் மீட்பு சேவைகள், மருத்துவ உதவி, உளவியல் ஆலோசனை, சட்ட உதவி, காவல் துறை உதவி மற்றும் தற்காலிகமான தங்கும் இட வசதி போன்ற சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக நலத்துறை மூலம் ஒருங்கிணைந்த சேவை மையம் அறிமுகப்படுத்தப்பட்டு திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி முதல் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் நிர்வாக அலுவலர், முதன்மை ஆலோசகர், சமூக பணியாளர்கள், தொழில் நுட்ப அலுவலர், உதவியாளர் மற்றும் ஓட்டுனர், காவலர் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு பெண்கள் உதவி மையம் எண் ‘181’ மூலமாக இதுவரை 92 புகார்கள் பதிவு செய்யப்பட்டு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு பாதுகாப்புடன் தங்கும் வசதி அளிக்கப்பட்டு அவர்களுக்கு வாழ்க்கை முறைக்கான ஆலோசனை, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப காவல் துறை உதவி, சட்ட உதவி, மருத்துவ உதவி போன்ற உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் இதுவரை 8 பேருக்கு சட்ட ஆலோசனை, 36 பேருக்கு உளவியல் ஆலோசனை, 14 பேருக்கு காவல் துறை உதவி, 5 பேருக்கு மருத்துவ உதவி, 22 பேருக்கு தங்கும் வசதி என மொத்தம் 85 பேருக்கு ஆலோசனைகளும், உதவிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது மையத்தின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். மேலும் இதன் மூலம் அதிகளவில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

ஆய்வின் போது உதவி கலெக்டர் (பயிற்சி) அனந்த்மோகன், மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டினா தா.டார்த்தி, பாதுகாப்பு அலுவலர் கோமதி மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர். 
Tags:    

Similar News