செய்திகள்
ரோகித் சர்மா

ரோகித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தனர்

Published On 2021-09-11 10:06 GMT   |   Update On 2021-09-11 10:06 GMT
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் ரோகித் சர்மா உள்பட மூன்று மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்துள்ளனர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடர் 14-ந்தேதியுடன் முடிவடையும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. அதன்பின் 19-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். தொடரின் 2-வது பகுதி ஆட்டங்கள் தொடங்க இருக்கின்றன.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் (10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை) முடிந்த உடன் யு.ஏ.இ. செல்ல இருந்தனர். ஆனால்  இந்திய அணியின் பயிற்சியாளர்கள் தொடர்ச்சியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட, ஐந்தாவது டெஸ்ட் ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால்  ஐ.பி.எல். போட்டியில் விளையாட இருக்கும் வீரர்கள் உடனடியாக யு.ஏ.இ. சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், யார்க்கர் புகழ் பும்ரா ஆகியோர் இங்கிலாந்து மான்செஸ்டரில் இருந்து யு.ஏ.இ. புறப்பட்டனர். அவர்கள் இன்று காலை யு.ஏ.இ. சென்றடைந்தனர்கள்.

குடும்பத்துடன் சென்றுள்ள அவர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பின் அணியுடன் இணைந்து ஐ.பி.எல். போட்டியில் விளையாட தயாராவார்கள். மூன்று பேரும் சிறப்பு விமானம் மூலம் சென்றடைந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோர் நாளை யு.ஏ.இ. சென்றடைகின்றனர்.
Tags:    

Similar News