செய்திகள்
கைது

மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய திருடன் கைது

Published On 2021-10-09 11:21 GMT   |   Update On 2021-10-09 11:21 GMT
மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் கைவரியை காட்டிய புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திருடனை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை நகரில் பூட்டியிருக்கும் கடை மற்றும் வீடுகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதையடுத்து மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் உத்தரவின்பேரில் திருடர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நகரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஹெல்மெட் அணிந்திருந்தது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை மயிலாடுதுறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே சித்திரைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (வயது42) என்பதும், இவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மயிலாடுதுறை சித்தர்காடு பனந்தோப்பு தெருவில் சர்தார்சிங் என்பவரிடம் இருந்து திருடி வந்ததும், மயிலாடுதுறையில் 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடியதும் தெரிய வந்தது.

லட்சுமணன் மீது மயிலாடுதுறையில் 4 திருட்டு வழக்குகளும், திருப்பூர், புதுக்கோட்டை, கோவை, திண்டுக்கல், கடலூர், சென்னை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 56 திருட்டு வழக்குகளும் உள்ளன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லட்சுமணனை கைது செய்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News