செய்திகள்
வாக்குப்பதிவு எந்திரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 142 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

Published On 2021-02-22 13:01 GMT   |   Update On 2021-02-22 13:01 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 142 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, திண்டுக்கல், வேடசந்தூர், நத்தம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளிலும் 19 லட்சத்து 73 ஆயிரத்து 438 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 2 ஆயிரத்து 103 வாக்குச்சாவடிகள் இருந்தன. இதற்கிடையே சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி ஆயிரத்துக்கு மேல் வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்பின்னர் 1,050-க்கு அதிகமான வாக்காளர்கள் இருக்கும் வாக்குச்சாவடிகளை பிரிக்கும்படி, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதன்பேரில் மாவட்டம் முழுவதும் 1,050-க்கு அதிகமாக வாக்காளர்கள் இடம்பெற்றுள்ள வாக்குச்சாவடிகளை பிரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இந்த நிலையில் தேர்தலின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வசதியாக, பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணி நடந்தது.

இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்தனர். இதற்காக கடந்த சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றின் போது ஏற்பட்ட பிரச்சினைகளின் அடிப்படையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டன. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 142 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பது தெரியவந்தது.

இதில் திண்டுக்கல் தொகுதியில் 35 வாக்குச்சாவடிகளும், நிலக்கோட்டை தொகுதியில் 32 வாக்குச்சாவடிகளும், ஒட்டன்சத்திரம் தொகுதியில் 23 வாக்குச்சாவடிகளும், ஆத்தூர் தொகுதியில் 20 வாக்குச்சாவடிகளும், பழனி மற்றும் நத்தம் தொகுதிகளில் தலா 12 வாக்குச்சாவடிகளும், வேடசந்தூர் தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை ஆகும். இந்த வாக்குச்சாவடிகளில் தேர்தலின் போது கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News