செய்திகள்
கைது

ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ‘சஸ்பெண்டு’ ஆகிறார்கள்

Published On 2021-08-28 07:29 GMT   |   Update On 2021-08-28 07:29 GMT
லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏட்டு ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் இருளப்பன் ஆகியோரை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள சிறையில் அடைத்தனர்.
கோவை:

கோவை மணியக்காரம் பாளையத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட ஆயிலை வாங்கி கட்டிட பயன்பாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.

இவரிடம் கீரநத்தம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பணியாற்றும் ஏட்டு ராஜ்குமார் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் மற்றும் மாதம் தோறும் ரூ.1000 தரவேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் இருளப்பன் உடந்தையாக இருந்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அய்யப்பன் இது குறித்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு கூடுதல் டி.எஸ்.பி. திவ்யா தலைமையிலான போலீசார் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரம் பணத்தை கொடுத்தனர். இதனை அய்யப்பன் ஏட்டு ராஜ்குமாரிடம் கொடுத்த போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த இருளப்பனையும் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கோவை லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) செல்லத்துரை 2 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏட்டு ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் இருளப்பன் ஆகியோரை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட ஏட்டு ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் இருளப்பன் ஆகியோரை சஸ்பெண்டு செய்வதற்காக நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News