ஆன்மிகம்
பிலிப்பியர்

பைபிள் கூறும் வரலாறு: பிலிப்பியர்

Published On 2020-01-06 05:14 GMT   |   Update On 2020-01-06 05:14 GMT
வாழ்க்கையை மிகச் சுருக்கமாக “பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்” என முடிக்கிறார் பவுல்.
திருத்தூதர் பவுலின் நற்செய்திப் பயணங்களில் மூன்று பயணங்கள் மிக முக்கியமானவை. அவற்றில் இரண்டாம் மூன்றாம் பயணங்களின் போது பிலிப்பு நகருக்கு வருகை புரிந்தார்.

பிலிப்பியாவில் நற்செய்தி அறிவித்தலை வெற்றிகரமாகச் செய்த அவர் அங்குள்ள மக்கள் பலரின் இதயத்திலும் இடம் பிடித்தார்.

பவுல் சிறைபிடிக்கப்பட்டு தவித்த காலத்தில் பிலிப்பியர்கள் அவருக்கு உதவ வேண்டும் என தவித்தனர். எப்பிப்பிராத்து எனும் நபரை தேர்ந்தெடுத்து, அவரிடம் பணமும், தேவையான பொருட்களும் கொடுத்து, பவுலை சந்திக்குமாறு அனுப்பினர்.

பவுல் எங்கே சிறை பிடிக்கப்பட்டிருந்தார் என்பதில் மாற்றுக் கருத்துகள் உண்டு, எனினும் அவர் உரோமையில் சிறைபிடிக்கப்பட்டு “வீட்டுக்காவலில்” வைக்கப்பட்டிருந்தார் என்பதே பொதுவான நம்பிக்கையாகும்.

பிலிப்பு பணக்காரத்தனத்தின் உச்சமாக இருந்த நகரம். தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவதும், விற்பதும் அங்குள்ள சகஜமான தொழில். பிலிப்பு எனும் மன்னனின் பெயரால் அந்த நகரம் அழைக்கப்பட்டு வந்தது.

நாம் வரலாற்றில் படித்த ‘அலெக்சாண்டர் த கிரேட்’ மன்னனின் தந்தை தான் இந்த பிலிப்பு. 1990-ல் அகழ்வாராய்ச்சியில் பிலிப் மன்னனின் கல்லறை சிக்கியது என்பதும், அதிலிருந்த தங்கங்களின் அளவு உலகையே மிரள வைத்தது என்பதும் சுவாரசியச் செய்திகள்.

பிலிப்பு நகரில் திருச்சபை சுமார் கி.பி. 52-ல் ஏற்படுத்தப்பட்டது. ஒரு சிலரை வைத்து இந்த கூட்டத்தை பவுல் ஆரம்பித்தார். பிறகு அங்கிருந்து விடைபெற்றார். அதன்பின் நீண்ட காலத்துக்குப் பிறகு தான் இந்த நூலை பவுல் எழுதுகிறார்.

எருசலேமில் அவரைக் கைது செய்து ரோமைக்கு சங்கிலிகளால் கட்டி அவரை அனுப்பி வைத்தார்கள். உரோமை நகரில் அவர் கைதியாய் இருந்த காலகட்டத்தில் இந்த நூலை அவர் எழுதுகிறார்.

இந்த நூலை பவுல் எழுதுவதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள். ஒன்று பவுலுக்குத் தேவையான பண உதவியை பிலிப்பு சபையினர் செய்கின்றனர். இரண்டு, ஒரு நபரையும் கூடவே அனுப்பி வைத்து, பவுலுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யப் பணிக்கின்றனர்.

இந்த நிகழ்வுகள் பவுலை மகிழ்ச்சிக்குள்ளாக்கின. கிறிஸ்துவின் அன்பு பரவுவதை அவர் உணர்ந்தார்.

ஆனால், நன்கொடையை பவுல் நாடவில்லை. அதற்கான நன்றியை அவர் கடிதத்தின் கடைசியில் தான் குறிப்பிடுகிறார். “நான் உங்கள் நன்கொடைகளை நாடவில்லை; மாறாக, உங்கள் கணக்கில் நற்பயன்கள் பெருகவேண்டும் என்றே விரும்புகிறேன்” என தனது நிலைப்பாட்டை மிக அழகாக வெளிப்படுத்துகிறார்.

துரதிர்ஷ்ட வசமாக பவுலின் உதவிக்கு வந்த எப்பிப்பிராத்து நோயாளியாகிறார். அதை அறிந்த பிலிப்பு நகரத்தினர் கலக்கம் அடைகின்றனர். சாகும் தருவாயிலிருந்த அவருக்காய் பவுல் செபித்து, அவரை மீண்டும் நலமுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். அப்போது தான் இந்தக் கடிதத்தையும் கொடுத்து அனுப்புகிறார்.

பவுலுக்கும் திருச்சபைக்கும் இடையேயான உணர்வு நிலையை இந்தக் கடிதம் அழகாகப் படம் பிடிக்கிறது. இந்த நூலில், பவுல் ஒரு தலைவராக இல்லாமல் ஒரு தோழராக, நண்பராக தன்னை வெளிப்படுத்துகிறார்.

சிறையில் வாடிய போதும் உள்ளத்தின் மகிழ்ச்சியை விட்டு விடாமல் இறைவனின் உற்சாகமாக இருக்கும் பவுலை இந்த நூல் வெளிக்காட்டுகிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என அவரது நூல் மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறுகிறது.

எப்போது வேண்டுமானாலும் மரணம் நேரலாம் எனும் சூழலிலும், “நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே” என தனது கடிதத்தை விசுவாசத்தால் நிரப்புகிறார் பவுல்.

“எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” எனும் பவுலின் வசனம் மிகவும் பிரசித்தம். ‘வறுமையிலும் வாழத்தெரியும், வளமையிலும் வாழத்தெரியும். தேவையானதெல்லாம் இறைவனின் அருகாமை மட்டுமே’ என பவுல் ஆன்மிகத்தை முதலில் வைத்துப் பேசுகிறார்.

நமது வாழ்க்கையில் தாழ்மையைக் கொண்டிருக்க வேண்டியதன் தேவையை பவுல் இயேசுவை ஒப்பிட்டு விளக்குகிறார்.

“(இயேசு) தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப் படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்” என பவுல் குறிப்பிடுகிறார்.

‘கிறிஸ்து நமக்குள் செயலாற்று கிறார், நாம் கிறிஸ்துவை வெளியே செயல்படுத்த வேண்டும். நமக்கானதை விடுத்து பிறருக்கானதை நாடவேண்டும். உலக சிந்தனையை விட்டுவிட்டு, விண்ணக சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும்’ என்பது போன்ற போதனைகளை பவுல் தருகிறார்.

விசுவாசிகளுக்கு இறைவன் என்ன தருகிறார் என்பதைத் தாண்டி இறைவனுக்கு விசுவாசிகள் என்ன தரவேண்டும் என்பதை கற்றுத்தருகிறது இந்த நூல்.

வாழ்க்கையை மிகச் சுருக்கமாக “பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்” என முடிக்கிறார் பவுல்.

நிச்சயம் படிக்க வேண்டிய ஒரு விவிலிய நூல், பிலிப்பியர்.

சேவியர்
Tags:    

Similar News