ஆன்மிகம்
விநாயருக்கு அபிஷேகம் நடந்த காட்சிகளை படத்தில் காணலாம்.

மலைக்கோட்டை விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம்

Published On 2021-09-23 05:52 GMT   |   Update On 2021-09-23 05:52 GMT
விநாயகர் சதுர்த்தி 13-ம் நாளை முன்னிட்டு நேற்று மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் உற்சவர் விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம் நடைபெற்றது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்குப் பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். மலை உச்சியில் உச்சிப்பிள்ளையாரும், மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். பிரசித்திபெற்ற இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா 14 நாட்கள் கொண்டாடப்படும். முதல்நாளான விநாயகர் சதுர்த்தி அன்று 60 கிலோ கொழுக்கட்டை படைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

அதன்பின் ஒவ்வொரு நாளும் மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் உள்ள உற்சவ கணபதிக்கு பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூல கணபதி, ராஜகணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர் கணபதி, சித்திபுத்தி கணபதி அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றன.

13-ம் நாளான நேற்று மதியம் 12 மணிக்கு மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் உற்சவர் விநாயகருக்கு திருச்சி சாரதாஸ் சார்பில் விபூதி, சந்தனாதி தைலம், திரவிய பொடி, அரிசி மாவு, நெல்லி முள்ளி பொடி, மஞ்சள் பொடி, குங்குமம், தேன், நெய், பஞ்சாமிர்தம், பால், தயிர், எலுமிச்சம் பழம், சாத்துக்குடி, கரும்புசாறு, திராட்சை, விளாம்பழம், மாதுளை, அன்னாசி பழம், அன்னாபிஷேகம், வெந்நீர், இளநீர், சந்தனம், சொர்ணாபிஷேகம், பன்னீர் உள்பட 27 வகையான அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நடன கணபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

14-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மூலவர் உற்சவருக்கு கோவில் பணியாளர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகமும், லட்சார்ச்சனையும் செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News