செய்திகள்
மீன் மார்க்கெட்

ஈரோட்டில் மீன்-இறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

Published On 2021-09-13 05:44 GMT   |   Update On 2021-09-13 05:44 GMT
ஈரோடு மாநகர் பகுதியில் கோழி, ஆடு இறைச்சி கடைகளிலும், இறைச்சிகளை வாங்க நேற்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஈரோடு:

புரட்டாசி மாதம் வருகிற 17-ந்தேதி தொடங்க உள்ளது. இந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் அசைவத்தை தவிர்த்து விரதம் இருந்து பெருமாளை வணங்குவர். இந்த நிலையில் புரட்டாசி மாதம் அடுத்த வாரம் தொடங்க இருப்பதால் அசைவ பிரியர்கள் நேற்று மீன், இறைச்சி போன்றவற்றை விரும்பி வாங்கிச்சென்றனர். இதன் காரணமாக ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட், ஸ்டோனி பாலம் அருகில் உள்ள மீன் மார்க்கெட்டில் நேற்று அதிகாலை முதலே வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் மீன்களின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. எனினும் மீன் விற்பனை நேற்று அமோகமாக நடைபெற்றது. மத்தி மீன் ஒரு கிலோ ரூ.200-க்கும், ரோகு ரூ.180-க்கும், வஞ்சரம் ரூ.800-க்கும் விற்பனையானது. இதேபோல் பாறை (ரூபா), சங்கரா போன்ற மீன்களும் கடந்த வாரத்தை விட சற்று விலை உயர்ந்து காணப்பட்டது. மேலும் ஈரோடு மாநகர் பகுதியில் கோழி, ஆடு இறைச்சி கடைகளிலும், இறைச்சிகளை வாங்க நேற்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அலைமோதியது.
Tags:    

Similar News