செய்திகள்
முதல்வர் பழனிசாமி.

முதல்-அமைச்சர் 22-ந் தேதி வருகை: தூத்துக்குடியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

Published On 2020-09-17 09:00 GMT   |   Update On 2020-09-17 09:00 GMT
தூத்துக்குடி மாவட்ட கொரோனா பரவல் நிலை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் வருகிற 22-ந் தேதி நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

தூத்துக்குடி:

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவல் நிலை, தடுப்பு நடவடிக்கைகள், அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள், புதிய திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வளர்ச்சிப்பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கடந்த மாதம் 7-ந் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கொரோனா பரவல் நிலை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.

இதில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரத்தில் இருந்து கார் மூலமாக தூத்துக்குடி வருகிறார்.

ஆய்வு கூட்டத்தை தொடர்ந்து மாவட்டத்தில் முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பேசுகிறார்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முழுவதும் புதியதாக பெயிண்ட் அடிக்கப்பட்டு பளிச்சென காட்சியளிக்கிறது.

மேலும் கலெக்டர் அலுவலக வளாகம் தூய்மை படுத்தப்பட்டு, புதிதாக சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே பூச்செடிகள் மற்றும் நுழைவுவாயில் பகுதிகளில் புதியதாக இரும்பு கிரில்கள் அமைத்து அழகுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், துறை தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி செய்து வருகிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் தூத்துக்குடி வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் எடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News