செய்திகள்
ராமதாஸ்

வெற்றி அறிவிப்பு வரும்வரை ஒருநிமிடம் ஓயக்கூடாது- டாக்டர் ராமதாஸ் கடிதம்

Published On 2021-04-01 16:04 GMT   |   Update On 2021-04-01 16:04 GMT
அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் உள்ள முக்கிய அம்சங்களை மக்களின் கவனத்திற்கு கொண்டு சேருங்கள் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை:

டாக்டர் ராமதாஸ் பா.ம.க. தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தகைய வெற்றியை அடைய வேண்டும் என்று நினைத்தோமோ... அந்த வெற்றி உறுதியாகி விட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கடந்த 19-ந்தேதி பரப்புரையைத் தொடங்கிய நான், இது வரை 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருக்கிறேன். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் நேற்று நான் பரப்புரை மேற்கொண்ட போது மாநாட்டிற்கு இணையாக மக்கள் திரண்டு வந்தனர். நம் மீது மக்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதற்கு இதுவே சாட்சி. இதுவே வெற்றிக்கு அடித்தளமாகும்.

கள நிலைமையை மதிப்பீடு செய்து நாம் களிப்பில் இருக்கிறோம். நமது எதிரிகள் கணிப்புகளை நம்பி கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கனவில் மிதந்து கொண்டே இருக்கட்டும். நாம் களத்தில் உழைத்துக் கொண்டே இருப்போம். களம் நமக்கு சாதகமாக இருக்கிறது என்பதற்காக நாம் சற்றும் அயர்ந்து விடக் கூடாது. அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் உள்ள முக்கிய அம்சங்களை மக்களின் கவனத்திற்கு கொண்டு சென்று சேருங்கள்.

இதுவரை வாக்காளர்களை 10 முறை சென்று வாக்கு சேகரித்திருந்தாலும், இனி மீதமுள்ள நாட்களில் இன்னும் குறைந்தது 5 முறையாவது வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும். வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் செல்ல வேண்டும் என்பதால் அவர்களால் ஒரு முறைக்கு மேல் வர இயலாது. அதனால், அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் ஒவ்வொருவரும் தாங்கள் தான் வேட்பாளர் என்று நினைத்துக் கொண்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும். வெற்றி அறிவிப்பு வரும் வரை நாம் ஒரு நிமிடம் கூட ஓயக் கூடாது.

அடுத்த 5 நாட்களுக்கு நாம் வழங்கவிருக்கும் உழைப்பும், அதன்பிறகு வாக்கு எண்ணிக்கை வரை நாம் மேற்கொள்ளவிருக்கும் கண்காணிப்பும் தான் 234 தொகுதிகளிலும் நமக்கு வெற்றியைத் தேடித் தரப்போகின்றன.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News