செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11ஆயிரத்து 456 கன அடியாக அதிகரிப்பு

Published On 2021-08-28 03:56 GMT   |   Update On 2021-08-28 03:56 GMT
ஏற்கனவே கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் காவிரியை வந்தடைந்ததால் ஒகேனக்கலில் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
மேட்டூர்:

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே பெய்த கனமழையினால் இந்த அணைகள் நிரம்பியதால் உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. மழை காரணமாக இந்த அணைகளில் இருந்து நீர் திறப்பு படிப்படியாக அதிகரித்துள்ளது.

இதனால் கபினி அணையில் இருந்து 6 ஆயிரத்து 750 கன அடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 8 ஆயிரத்து 612கன அடியும் என மொத்தம் 15 ஆயிரத்து 362 கன அடி உபரி நீர் காவிரியில் இன்று காலை முதல் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் காவிரியில் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது.

ஏற்கனவே கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் காவிரியை வந்தடைந்ததால் ஒகேனக்கலில் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் 7 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 8 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை மேலும் அதிகரித்து 12 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒனேக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 7 ஆயிரத்து 474 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 11 அயிரத்து 456 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 6 ஆயிரம் கன அடியும், கால்வாயில் 650 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது .

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுதால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. நேற்று 66.06 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 66.65 அடியானது.

இனி வரும் நாட்களில் கர்நாடக அணைகளில் கூடுதலாக திறக்கப்படும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்பதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News