செய்திகள்
தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் வாக்களிக்க வந்த மக்கள்

மேற்கு வங்காளத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

Published On 2021-04-10 01:33 GMT   |   Update On 2021-04-10 01:33 GMT
மேற்கு வங்காளத்தில் 44 தொகுதிகளுக்கான நான்காம் கட்ட ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
கொல்கத்தா:

மம்தா பானர்ஜி ஆளுகிற மேற்கு வங்காள மாநில சட்டசபைக்கு 8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு 3 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. இன்று 4-ம் கட்ட தேர்தல் நடக்கிறது.

மொத்தம் 373 வேட்பாளர்களின் தலையெழுத்தை ஒரு கோடியே 15 லட்சத்து 81 ஆயிரத்து 22 வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர்.

ஹவுரா, தெற்கு 24 பர்கனாஸ், ஹூக்ளி, அலிபுர்துவார், கூச் பெஹார் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இதில், கூச் பெஹார் பரபரப்பான மாவட்டமாக கருதப்படுகிறது.

மொத்தமுள்ள 15 ஆயிரத்து 940 ஓட்டுச்சாவடிகளுக்கு, 789 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 
இன்றைய தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த மத்திய மந்திரி பபுல் சுப்ரியோ டோலிகஞ்ச் தொகுதியில், திரிணமுல் காங்., அமைச்சர் அருப் பிஸ்வாசை எதிர்த்து களம் காண்கிறார்.

திரிணமுல் காங்., பொதுச் செயலரும், மாநில மந்திரியுமான பார்த்தா சாட்டர்ஜி, பாஜகவைச் சேர்ந்த நடிகை ஷ்ரபந்தி சாட்டர்ஜியை எதிர்த்து போட்டியிடுகிறார். திரிணமுல் காங்.,கில் இருந்து சமீபத்தில் விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் மந்திரி ரஜிப் பானர்ஜி, ஹவுராவின் டோம்ஜுர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
Tags:    

Similar News