செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்கு அளிக்க உலக வர்த்தக அமைப்பில் இந்தியா எடுத்த முயற்சியில் முன்னேற்றம்

Published On 2021-06-10 21:45 GMT   |   Update On 2021-06-10 21:45 GMT
கொரோனா தடுப்பூசிக்கு இந்த காப்புரிமை விலக்கு கிடைத்தால், பல நாடுகள் அவற்றை தயாரிக்கவும், குறைவான விலையில் வினியோகிக்கவும் வழி பிறக்கும்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு காப்புரிமையை தற்காலிகமாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் முறையிட்டன. இதற்காக உலக வர்த்தக அமைப்பின் டிரிப்ஸ் ஒப்பந்த விதிகளை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது.

கொரோனா தடுப்பூசிக்கு இந்த காப்புரிமை விலக்கு கிடைத்தால், பல நாடுகள் அவற்றை தயாரிக்கவும், குறைவான விலையில் வினியோகிக்கவும் வழி பிறக்கும்.

இந்த முன்மொழிவு திட்டத்துக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா உள்பட 62 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்தியா எடுத்துள்ள இந்த முயற்சி வெற்றி பெற்று கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமைக்கு தற்காலிக விலக்கு அளித்தால், அது அந்த நாளில் இருந்து 3 ஆண்டுக்கு அமலில் இருக்கும்.

இந்த விவகாரம், உலக வர்த்தக அமைப்பின் டிரிப்ஸ் கவுன்சிலில் நேற்று முன்தினம் விவாதத்துக்கு வந்தது.

அப்போது இது தொடர்பாக டிரிப்ஸ் கவுன்சிலின் தலைவர் உரையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒருமித்த கருத்து உருவானது. இந்தபேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அதில் முடிவு எடுக்கப்படும்.

இந்த விவகாரத்தில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய வர்த்தக துறை செயலாளர் அனுப் வாதவன் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமையில் இருந்து தற்காலிகமாக விலக்கு அளிக்க வேண்டும் என்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் முன்மொழிவு திட்டம் தொடர்பாக தலைவர் உரை அடிப்படையிலான பேச்சுவார்த்தையானது முன்னோக்கி செல்லும் வழியாக அமையும். இதன் அர்த்தம், காப்புரிமை விலக்கு அளிக்கும் திட்டத்தின் பின்னணியில் உள்ள நோக்கத்தை பரந்த மற்றும் கொள்கை அளவில் உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டன என்பதுதான்.

இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் மேற்கொண்ட முன்மொழிவு திட்டம், அந்த வகையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை வேகமாக அடைந்துள்ளது.

அடுத்த மாத இறுதிக்குள் உறுப்பு நாடுகள் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு முடிவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இது ஒரு சாதகமான முன்னேற்றம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News