செய்திகள்
ஜிகே வாசன்

சுயநலத்துக்காக விலகுபவர்களால் த.மா.கா. தொய்வடையாது - ஜிகேவாசன்

Published On 2021-07-03 08:02 GMT   |   Update On 2021-07-03 08:02 GMT
பெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் இணைந்து குறைக்க முயற்சிக்க வேண்டும் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை:

த.மா.கா.வில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் பலர் விலகி வருகிறார்கள். இதனால் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் கட்சி தலைமை அலுவலகத்தில் ஜி.கே.வாசன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

த.மா.கா. தேர்தலை மையமாக கொண்டு தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. அதனால் வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படுவது இல்லை. இந்த இயக்கம் ஒரு லட்சியத்தோடு தொடங்கப்பட்ட இயக்கம். அந்த லட்சியப் பாதையில் தொய்வின்றி பயணிப்போம்.

இதே நேரத்தில் கட்சியில் இருந்து சுயநலத்துக்காக சிலர் விலகி சென்று இருப்பதால் கட்சிக்கு எந்த தொய்வும் ஏற்படப் போவதில்லை.

இந்த ஆண்டு காமராஜர் பிறந்தநாளான வருகிற 15-ந் தேதி கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். 5-ந் தேதி வரை நானும் பிரசாரத்துக்கு செல்கிறேன்.

கொரோனா 2-வது அலை இன்னும் முடிவு பெறவில்லை. மத்திய- மாநில அரசுகள் இணைந்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அரசு தளர்வுகள் அறிவித்தாலும் மக்கள் முன்னெச்சரிக்கையாக கபசுர குடிநீர் அருந்துவது, முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பொதுவான கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கைவிடக்கூடாது. அதுவே நம் கையில் இருக்கும் இலவச கொரோனா கட்டுப்பாட்டு மருந்தாகும். அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.


நீட் தேர்வு விவகாரத்தில் அரசியல் கட்சிகள், மாணவர்களை குழப்ப வேண்டாம். நீட் தேர்வுக்கு அவர்களை தயார்படுத்துவதே அரசின் கடமையாகும். பெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் இணைந்து குறைக்க முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாநில நிர்வாகிகள் விடியல் சேகர், சக்தி வடிவேல், ஜவகர்பாபு, ஜி.ஆர்.வெங்கடேஷ், டி.என்.அசோகன், மாவட்ட தலைவர்கள் பிஜூ சாக்கோ, சைதை மனோகரன் மற்றும் துறைமுகம் செல்வகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

இதையும் படியுங்கள்...தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது

Tags:    

Similar News