செய்திகள்
ஓவைசி

உ.பி.சட்டசபை தேர்தலில் ஓவைசி கட்சி 100 இடங்களில் போட்டி

Published On 2021-11-22 09:38 GMT   |   Update On 2021-11-22 09:38 GMT
தேர்தல் கூட்டணி தொடர்பாக சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும், ஐதராபாத் தொகுதியின் எம்.பி.யுமான ஓவைசி தெரிவித்தார்.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது.

இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உ.பி.யில் நடைபெற உள்ள தேர்தலை அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். காங்கிரஸ், பா.ஜனதா, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தேர்தல் களத்தில் உள்ளன.

இதற்கிடையே அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிஹாத்துல் முஸ்லிம் லீக் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) கட்சியும் உ.பி. சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது.

ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட ஏ.ஐ.எம்.ஐ.எம். உ.பி.யில் 100 இடங்களில் போட்டியிடுகிறது. இதை அந்த கட்சியின் தலைவரும், ஐதராபாத் தொகுதியின் எம்.பி.யுமான ஓவைசி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

உத்தரபிரதேச தேர்தலில் நாங்கள் 100 இடங்களில் போட்டியிடுகிறோம். தேர்தல் கூட்டணி தொடர்பாக சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்களால் உ.பி.யில் பல இடங்களை கைப்பற்ற முடியும்.

இவ்வாறு ஓவைசி கூறினார்.

பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய எஸ்.பி.எஸ்.பி. கட்சியுடன் கூட்டணி அமைக்க ஓவைசி பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அந்த கட்சி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பீகார் சட்டசபை தேர்தலில் ஓவைசி கட்சி தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த கட்சி பெற்ற ஓட்டுக்களால் ராஷ்டீரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இதேமாதிரி உ.பி. தேர்தலிலும் அவர் ஓட்டுக்களை பிரிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
Tags:    

Similar News