ஆன்மிகம்
இனிய வாழ்வு தரும் 2021

இனிய வாழ்வு தரும் 2021

Published On 2020-12-31 09:24 GMT   |   Update On 2020-12-31 09:24 GMT
சுபஸ்ரீ சார்வரி வருடம் மார்கழி மாதம் 17-ந் தேதி அன்று (1.1.2021) வெள்ளிக்கிழமை துதியை திதி, பூசம் நட்சத்திரம் கடக ராசியில் புத்தாண்டு பிறக்கின்றது.
சுபஸ்ரீ சார்வரி வருடம் மார்கழி மாதம் 17-ந் தேதி அன்று (1.1.2021) வெள்ளிக்கிழமை துதியை திதி, பூசம் நட்சத்திரம் கடக ராசியில் புத்தாண்டு பிறக்கின்றது. நவக்கிரகங்களில் ‘தைரியகாரகன்’ என்றழைக்கப்படும் செவ்வாயும், ‘ஆயுள்காரகன்’ என்றழைக்கப்படும் சனியும், சொந்த வீட்டில் சஞ்சரிக்கிறார்கள். குரு பகவான் மகரத்தில் நீச்சம்பெற்று ஆட்சி பெற்ற சனியின் சேர்க்கையால் பங்கமடைந்து நீச்சபங்க ராஜயோகத்தோடும், சந்திரனை குரு பார்த்து குருச்சந்திர யோகத்தோடும் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கின்றது.

பிறக்கும் புத்தாண்டு நமக்குப் பெருமைகளை வழங்கவும், ஆரோக்கியத்தோடு வாழ்க்கை நடத்தவும், ஆண்டின் தொடக்க நாளில் தும்பிக்கையானை நம்பிக்கையோடு வழிபட்டு காரியங்களில் வெற்றி காண வழிவகுத்துக் கொள்வோம்.

ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கின்ற பொழுதும் இந்த ஆண்டு நமக்கு எப்படிஇருக்கும்?, நம்முடைய எதிர்பார்ப்புகளை எல்லாம் நிறைவேற்றுமா?, பொருளாதாரப் பற்றாக்குறை அகலுமா?, புதிய பாதை புலப்படுமா? என்று அனைவருமே சிந்திப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, நோய் தொற்று அகன்று மக்கள் நிம்மதியாக வாழ வழி கிடைக்குமா?, சென்ற ஆண்டு ஸ்தம்பித்து நின்ற தொழில்கள் மீண்டும் வெற்றிநடை போட வழிபிறக்குமா?, குடும்பத்தில் அனைவருக்கும் ஆரோக்கியம் சீராக இருக்குமா? என்று சிந்திக்க நேரிடுகின்றது. இவற்றிற்கெல்லாம் விடைகூறும் விதத்தில் இந்தப் புத்தாண்டு பிறக்கப் போகின்றது.

தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதைக் கொண் டாடுவது போல, ஆங்கிலப் புத்தாண்டையும் இப்பொழுது மக்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். கிரகங்களின் சுழற்சியே மனித வாழ்வின் வளர்ச்சி என்பதை மக்கள் அறிந்து கொண்டனர். அதனால் உலா வரும் கிரகங்களின் ஒப்பற்ற மாற்றங்கள் வரும்பொழுதெல்லாம் அதைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

புத்தாண்டின் கூட்டுத்தொகை 5 (2+0+2+1=5), புதனுக்குரிய எண் ஆதிக்கத்திற்குள் வருகின்றது. ஆண்டின் தொடக்கத்தில் மகரத்தில் புதன் சஞ்சரிக்கின்றார். அவரோடு குருவும் சனியும் கூடி இருக்கின்றார்கள். எனவே குருவருளும், திருவருளும் நமக்கு கிடைக்க விநாயகப் பெருமானையும், முருகப்பெருமானையும், குரு பகவானையும், சிவன்-உமையவள், நந்தி, சரஸ்வதி, அனுமன், விஷ்ணு, லட்சுமி ஆகியோரை முறையாக வழிபட்டால் முன்னேற்றத்தின் முதல்படிக்குச் செல்ல வழிபிறக்கும்.

யோகம் பெறும் ராசி-நட்சத்திரங்கள்

இந்தப் புத்தாண்டில் யோகம் பெறும் ராசி மற்றும் நட்சத்திரங்கள் விவரம் வருமாறு:-

ஆண்டின் தொடக்கத்தில் குரு பார்வையால் புனிதமடையும் ராசிகளான ரிஷபம், கடகம், கன்னி ஆகிய ராசிகள், ஏழரைச்சனி விலகி நன்மை பெறும் ராசியான விருச்சிகம் ஆகியவை இந்த ஆண்டில் மிகச் சிறப்பான பலன்களைப் பெறும் ராசிகளாக அமைகின்றன. அவர்கள் தொட் டது துலங்கும், தொகை வரவு திருப்தி தரும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.

எண் கணித அடிப்படையில் புதனுக்குரிய எண்ணான 5-ன் ஆதிக்கத்தைக் கொண்ட 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள் மற்றும் புதனுக்கு நட்பு கிரகமான சனியின் ஆதிக்கம் கொண்ட எண்களான 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், சுக்ரன் கிரகத்துக்குரிய எண் ஆதிக்கமான 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான பலன்களை தரும் ஆண்டாக அமையப்போகிறது.

ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய புதனுக்குரிய நட்சத்திரத்தில் பிறந் தவர்களுக்கும் இந்த ஆண்டு பொன்கொழிக்கும் ஆண் டாக அமையப்போகின்றது.

யோகம் பெறும் ராசிக்காரர்களும், மற்ற நட்சத்திரக்காரர்களும் தங்கள் சுய ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானத்தின் பலமறிந்து அதற்குரிய தெய்வ வழிபாடுகளை தேர்ந்தெடுத்துச் செய்தால் மேலும் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.

கீர்த்தி தரும் கிரக சஞ்சாரம்

இந்தப் புத்தாண்டில் 13.11.2021 அன்று கும்ப ராசிக்கு குரு பகவான் முறையாக பெயர்ச்சியாகின்றார். அப்பொழுது அதன் பார்வை மிதுனம், சிம்மம், துலாம் ஆகிய ராசிகளில் பதிகின்றது. ஆண்டின் மையப்பகுதியில் கும்ப ராசியிலும், அதன் பிறகு மகர ராசியிலும், குரு வக்ரம் பெறுகின்றார். இவற்றை அடிப்படையாக வைத்தும் சனியின் வக்ர காலம் மற்றும் செவ்வாய்-சனி பார்வை காலத்தை வைத்துக் கணித்துப் பார்த்தும் இந்த புத்தாண்டு பலன்கள் எழுதப்பட்டுள்ளது. முரண்பாடான கிரகங்களின் சேர்க்கை காலத்தில் இயற்கை சீற்றங்களில் இருந்து விடுபடவும், நோய் தொற்று பாதிப்புகள் அகலவும், போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறவும் சிறப்பு பரிகாரங்களையும், வழிபாடுகளையும் மேற்கொள்ளுங்கள்.

விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டிய காலம் :

இயற்கை சீற்றங்கள், நோய் தொற்றுகள் மற்றும் பிற தாக்கங்களில் இருந்து விடுபட இறைவழிபாடு தேவை. இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க நாம் அனைவரும் விழிப்புணர்ச்சியுடன் இருக்கவேண்டிய காலகட்டங்கள் வருமாறு:-

செவ்வாய்-சனி பார்வை

14.4.2021 முதல் 3.6.2021 வரை மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மகர ராசியில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கின்றார்.

அதேசமயம் கும்பத்தில் சஞ்சரிக்கும் குரு, செவ்வாயைப் பார்த்து அதைப் புனிதப்படுத்துகின்றார்.

4.6.2021 முதல் 21.7.2021 வரை கடகத்தில் சஞ்சரிக்கும் நீச்சம் பெற்ற செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சனியை சப்தமப் பார்வையாகப் பார்க்கின்றார்.

சனியின் வக்ர காலம்

12.5.2021 முதல் 26.9.2021 வரை மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார்.

கன்னி ராசியில் செவ்வாய்

8.9.2021 முதல் 23.10.2021 வரை கன்னி ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கின்றார். ‘கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும்’ என்பது பழமொழி. எனவே இந்தக்கால கட்டத்தில் மிகக்கவனமுடன் செயல்படுவது நல்லது.

சர்ப்ப தோஷ காலம்

7.12.2021 முதல் 31.12.2021 வரை ரிஷபத்தில் ராகுவும், விருச்சிகத்தில் கேதுவும் இருக்க மற்ற பெரும்பான்மையான கிரகங்கள் அதற்குள் அடைபட்டிருக்கின்றன. பாம்புக் கிரகங்களின் ஆதிக்கத்தில் உள்ள ராசியினர் அனைவரும் முறையாக சர்ப்ப சாந்தி செய்து கொள்வதன் மூலம் சந்தோஷத்தை தக்க வைத்துக்கொள்ளலாம்.
Tags:    

Similar News