ஆன்மிகம்
வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் கொரோனா காரணமாக பாடைக்காவடி எடுக்க தடை

வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் கொரோனா காரணமாக பாடைக்காவடி எடுக்க தடை

Published On 2021-03-22 06:51 GMT   |   Update On 2021-03-22 06:51 GMT
வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் பாடைக்காவடி திருவிழா நடைபெற்றது. இதில் கொரோனா காரணமாக பாடைக் காவடி எடுக்க தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் வரதராஜன்பேட்டை தெரு பகுதியில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பாடைக் காவடி ்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இத்திருவிழாவின் போது ஆயிரக்கணக்கானோர் பாடைக்காவடி, அலகு காவடி, பன்னீர் காவடி, தொட்டில் காவடிகளை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் பாடைக்காவடி திருவிழா கடந்த ஆண்டு(2020) கொரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை. மேலும் ஆவணி ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் தெப்பத் திருவிழாவும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் இந்த ஆண்டு மகா மாரியம்மன் கோவிலில் பாடைக்காவடி திருவிழா கடந்த 5-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 7-ந்தேதி முதல் காப்பு கட்டும் நிகழ்ச்சியும், 14-ந் தேதி இரண்டாம் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

விழா நாட்களில் தினமும் காமதேனு, மயில் வாகனம் ரிஷபம், சிம்மம் மற்றும் வெள்ளி அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா நடை பெற்றது. முக்கிய திருவிழாவான பாடைக்காவடி திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவின் முக்கிய அம்சமான பாடைக்காவடிகளை பக்தர்கள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தால் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் பக்தர்கள் காவடி எடுத்து வர அரசு நிர்வாகம் தடை விதித்தது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

திருவிழாவின்போது கோவிலில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அர்ச்சனை உள்ளிட்ட கடைகளுக்கு அனுமதி இல்லை. பக்தர்கள்அர்ச்சனை செய்வதற்கும் தீபமேற்றி வழிபாடு நடத்தவும் அனுமதிக்கப்படவில்லை. 2 ஆண்டுகளாக பாடைக் காவடி எடுக்க முடியாததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜமோகன், இளங்கோவன், தாவித் அகமது மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 284 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த பணியை திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேரூராட்சி சார்பில் குடிநீர், கழிவறை வசதி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

தொடர்ந்து நேற்று மாலை 6 மணி அளவில் கோவிலின் மற்றொரு முக்கிய விழாவான செடில் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குடமுருட்டி ஆற்றில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக செம்மறி ஆடு பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோவிலில் முன்புறமாக நடப்பட்டிருந்த செடில் மரத்தில் செம்மறி ஆடு ஏற்றப்பட்டு மூன்று முறை வலம் வந்தது. முன்னதாக காலையில் மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இன்று(திங்கட்கிழமை) விடையாற்றி விழா நடைபெறுகிறது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரமேஷ், ஆய்வாளர் ரமணி, மேலாளர் சீனிவாசன், தலைமை அர்ச்சகர் செல்வம் உள்ளிட்ட கிராமத்தினர் செய்திருந்தனர். பாடைக்காவடி விழாவின் போது ஆண்டுதோறும் அரசு போக்குவரத்து கழகத்தால் பல்வேறு வெளிமாவட்டங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படும் ஆனால் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருவதால் இந்த ஆண்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News