செய்திகள்
யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

துடியலூர் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்

Published On 2021-11-25 08:05 GMT   |   Update On 2021-11-25 08:05 GMT
துடியலூர் அருகே யானை கூட்டம் விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவது குறித்து வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறியுள்ளனர்.

கவுண்டம்பாளையம்:

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒருமாத காலமாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள் குடியிருப்புகளுக்கு சர்வ சாதாரணமாக சுற்றி திரிவதும், விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளது.

பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட தாளியூர் பகுதியில் செல்வராஜ், ராஜசேகர், குமாரசாமி, வெங்கடேசன், பிரபாகரன், மணி ஆகியோருக்கு சொந்த விவசாய தோட்டங்கள் உள்ளது. இங்கு அவர்கள் அனைவரும் வாழை பயிரிட்டுள்ளனர். இன்று அதிகாலை வனத்தை விட்டு வெளியில் வந்த 8 யானைகள் இவர்களது தோட்டத்திற்குள் புகுந்தது.

அங்கு பயிரிட்டிருந்த வாழை மரங்களை பிடுங்கி எறிந்தும், காலால் மிதித்தும், தின்றும் நாசப்படுத்தியது. காலை வரை அங்கேயே முகாமிட்டிருந்த யானைகள் பின்னர் ஊருக்குள் புகுந்து அங்குள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த மின் மோட்டார் மற்றும் பைப் லைனையும் உடைத்து சேதப்படுத்தியது. யானைகள் சேதப்படுத்தியதில் 1 லட்சம் மதிப்பிலான வாழைத்தார்கள் சேதம் அடைந்து ள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஒரு மாத காலமாக துடியலூர், பன்னிமடை சுற்றுவட்டார பகுதிகளில் யானைகள் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களில் சுற்றி திரிகின்றன. அப்படி வரும் யானைகள் பயிர்களை சேதப்படுத்தியும், வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். 

Tags:    

Similar News