ஆன்மிகம்
பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்ததை படத்தில் காணலாம்.

ஆவுடையார் கோவிலில் கார்த்திகை கடைசி சோம வார விழா

Published On 2019-12-17 05:58 GMT   |   Update On 2019-12-17 05:58 GMT
பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவிலில் கார்த்திகை கடைசி சோம வார விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே பரக்கலக்கோட்டை கிராமத்தில் பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இந்த கோவில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் சிவபெருமான் ஆலமரமாக காட்சி தருகிறார்.

இக்கோவிலில் உள்ள சாமிக்கு மத்திய புரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. மற்ற கோவில்களை போல இக்கோவிலின் நடை அனைத்து நாட்களிலும் திறக்கப்படுவது இல்லை ஆனால் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் நள்ளிரவு மட்டுமே நடை திறக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை மட்டுமே இக்கோவிலின் நடை பகலில் திறந்து இருப்பதை காணமுடியும். மற்ற நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலில் கதவு முன்பாக வழிபாடு செய்கிறார்கள். மேலும் ஆடு, கோழி, தேங்காய் உள்ளிட்டவற்றை பக்தர்கள் இந்த கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆலமரத்தையே ஆலயமாக போற்றி வணங்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோம வார விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சோமவார விழா கடந்த மாதம் (நவம்பர்) 18-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் நள்ளிரவில் நடை திறக்கப்பட்டு பொது ஆவுடையாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தநிலையில் நேற்று கடைசி சோம வார விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து தங்களது வயலில் சாகுபடி செய்யப்பட்ட நெல், உளுந்து மற்றும் தேங்காய், ஆடு, கோழி உள்ளிட்ட தானியங்களை காணிக்கையாக வழங்கி தரிசனம் செய்தனர்.

மேலும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நெல்களும், தேங்காய்களும் கோவில் வளாகத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தன. விழாவையொட்டி பொதுஆவுடையார் கோவிலுக்கு வேதாரண்யம், மன்னார்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பேராவூரணி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகையன், பரம்பரை அறங்காவலர்கள் சடகோபராமானுஜம், ராமானுஜம், கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News