செய்திகள்
ஆயிஷ் கோஷ்

ஜேஎன்யூ துணைவேந்தர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - ஆயிஷ் கோஷ்

Published On 2020-01-13 03:29 GMT   |   Update On 2020-01-13 03:29 GMT
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி விலகும் வரை போராட்டத்தை தொடர உள்ளதாக மாணவர் சங்க தலைவர் ஆயிஷ் கோஷ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. விடுதி கட்டண உயர்வை கண்டித்து அப்பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதற்கிடையே கடந்த 5ந் தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆசிரியர்களின் சங்கம் சார்பில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது திடீரென முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மாணவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் மாணவர் சங்க தலைவரான ஆயிஷ் கோஷின் மண்டை உடைந்தது. மேலும் சில மாணவர்களும் காயமடைந்தனர். 

இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது. மாணவர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. 



இரு தினங்களுக்கு முன்பு, டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதலில் தொடர்புடையவர்களின் படங்களை டெல்லி போலீசார் வெளியிட்டனர். இந்த தாக்குதலுக்கு ஹிந்து ரக்‌ஷா தளம் என்ற அமைப்பு பொறுப்பேற்றது. நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள் ஜே.என்.யூ.வில் நடப்பதாகவும் அதனால்தான் தாக்குதல் நடத்தினோம் என அந்த அமைப்பின் பிங்கி சவுத்ரி குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஜே.என்யூ துணைவேந்தர் பதவி விலகும் வரை போராட்டத்தை தொடர உள்ளதாக மாணவர் சங்க தலைவர் ஆயிஷ் கோஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆயிஷ் கோஷ் கூறுகையில், ‘இந்த சம்பவம் குறித்து டெல்லி காவல்துறை நேர்மையான முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஒரு சார்பாக செயல்படக்கூடாது. அடுத்தகட்ட நடவடிக்கையாக போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும். துணைவேந்தரை பதவி நீக்கம் செய்வது குறித்து பேச்சு வார்த்தை நடத்த மனிதவள மேம்பாட்டுத் துறை முன்வரவேண்டும்’ என தெரிவித்தார். 
Tags:    

Similar News