கிறித்தவம்
கர்த்தர்

கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு!

Published On 2022-03-10 08:13 GMT   |   Update On 2022-03-10 08:13 GMT
உங்களுடைய குடும்ப பாரத்தை, பிள்ளைகளைப் பற்றிய பாரத்தை, கடன் பிரச்சினைகளைப் பற்றிய பாரத்தை நீங்கள் தேவன் மேல் வைத்துவிடுவீர்களானால் நிச்சயமாகவே அவர் உங்களை ஆதரிப்பார்.

“கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒரு போதும் தள்ளாடவொட்டார்”. (சங்.55:22)

சங்கீதக்காரன் இளமையிலேயே அநேக பாரங்களைச் சுமந்தான். சரீரபிரகாரமான பாரங்களுண்டு. ஆத்துமாவில் சுமக்கிற பாரங்கள் உண்டு. ஆவியில் சுமக்கிற பாரங்களும் உண்டு. அப்போதெல்லாம் அவர் தேவன் மேல் பாரத்தை வைப்பதையே தெரிந்துகொண்டார்.

உங்களுடைய குடும்ப பாரத்தை, பிள்ளைகளைப் பற்றிய பாரத்தை, கடன் பிரச்சினைகளைப் பற்றிய பாரத்தை நீங்கள் தேவன் மேல் வைத்துவிடுவீர்களானால் நிச்சயமாகவே அவர் உங்களை ஆதரிப்பார். நீங்களாகவே பாரத்தை சுமந்தால் சோர்ந்து போய்விடுவீர்கள், இளைப்படைந்து விடுவீர்கள். அந்த பாரத்தை உங்களால் சுமக்க முடியாது. ஆகவே ஆண்டவர்மேல் உங்கள் பாரத்தை வைத்துவிடுங்கள்.

ஒரு மனிதன் ஒரு சுமையை தூக்கிக்கொண்டு வந்தான். ஒரு பஸ் ஓட்டுநர் அதைப் பார்த்து, அவனிடம், நீ இந்த சுமையை சுமந்து கொண்டு இன்னும் அதிக தூரம் நடக்க வேண்டுமே. உன்னால் நடக்க முடியாது. ஆகவே நீ பஸ்சில் ஏறிக்கொள் என்றார். அவன் பஸ்சில் ஏறினான். ஒரு சீட்டில் போய் உட்கார்ந்தான். கொஞ்சம் நேரம் கழித்து அந்த பஸ் ஓட்டுநர் அவனைத் திரும்பிப் பார்த்தார்.

அவன் அந்த சுமையை கீழே வைக்காமல் தலையில் சுமந்துகொண்டிருந்தான். பஸ் ஓட்டுநர் கேட்டார், ஏன் அந்த சுமையை தலையில் சுமந்துகொண்டு வருகிறீர்கள். அதற்கு அவர் என்னைத்தான் பஸ்ஸில் சுமந்துக்கொண்டு போகிறீர்கள். இந்த சுமையையுமா சுமக்க வேண்டும். இந்த சுமையின் எடை அதிகம் இதை நானே சுமந்துகொள்ளுகிறேன் என்றான். ஓட்டுநர் சொன்னார், இந்த பஸ் உன்னையும் சுமக்கும். உன் சுமையையும் சுமக்கும். இந்த சுமையை நீ தலையில் வைத்துக்கொண்டாலும், கீழே வைத்தாலும் பஸ் தான் சுமக்கிறது என்றார்.

அதைப்போல தான் ஆண்டவர் உங்களைச் சுமக்கிறது மாத்திரமல்ல, உங்களுடைய பிள்ளைகளை, உங்களுடைய வேலையை, மற்றும் உங்களுடைய எல்லா பொறுப்புகளையும் சுமக்கிறார்.

வேதம் சொல்லுகிறது, “ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?. ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை, அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார். அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?” (மத். 6:25-27).

பிரியமானவர்களே, கர்த்தருடைய சமுகத்தில் உங்களுடைய பாரத்தை இறக்கி வைத்து விட்டு ஜெபம் பண்ணுங்கள். அந்த பாரம் உங்களை மறுபடியும் தாக்காதபடிக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள். அப்போது எந்த பாரமும் உங்களை மேற்கொள்ளுவதில்லை.

போதகர் ஜோசப் ஆஸ்பார்ன் ஜெபத்துரை.
Tags:    

Similar News