உள்ளூர் செய்திகள்
ரெயில்

கோட்டம் மாறாததால் தமிழகம் கோட்டைவிடும் ரெயில்கள்

Published On 2022-04-15 07:11 GMT   |   Update On 2022-04-15 07:11 GMT
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் நடைமேடைகள், பிட்லைன்கள், ஸ்டேபளிங் லைன்கள் கேரளா வழியாக செல்லும் ரெயில்கள் அதிக அளவில் இயக்கப்படுவதால்தான் இட நெருக்கடி ஏற்பட்டு தமிழக மார்க்கத்தில் ரெயில்கள் இயக்க முடியாத நிலை உள்ளது.
சென்னை:

கோடை விடுமுறையையொட்டி திருநெல்வேலியில் இருந்து பல்வேறு சிறப்பு ரெயில்களை ரெயில்வே துறை அறிவித்துள்ளது.

இதன்படி திருநெல்வேலி- தாம்பரம் வாராந்திர ரெயில், திருநெல்வேலி-மேட்டு பாளையம் வழி பழநி, பொள்ளாச்சி வாராந்திர ரெயில், திருநெல்வேலி- பனஸ்வாடி(பெங்களூரு) வாராந்திர ரெயில் போன்ற ரெயில்கள் திருநெல்வேலியில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு ரெயில்கள் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள நாகர்கோவில் அல்லது கன்னியாகுமரியில் இருந்து இயக்காமல் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகள் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் இருப்பதால்தான் திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் இந்த சிறப்பு ரெயில்கள் நாகர்கோவிலில் இருந்து இயக்க போதிய ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பதால் மதுரை கோட்டத்தின் கடைசி எல்லையான திருநெல்வேலியுடன் நிறுத்தப்படுகிறது.

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் நடைமேடைகள், பிட்லைன்கள், ஸ்டேபளிங் லைன்கள் கேரளா வழியாக செல்லும் ரெயில்கள் அதிக அளவில் இயக்கப்படுவதால்தான் இட நெருக்கடி ஏற்பட்டு தமிழக மார்க்கத்தில் ரெயில்கள் இயக்க முடியாத நிலை உள்ளது. கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோவை வழியாக நியூ ஜல்பைகுரிக்கு (டார்ஜிலிங்) சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இதுபோன்ற கேரளா பயணிகளுக்கு பயன்படும் சிறப்பு ரெயில் என்றால் திருவனந்தபுரம் கோட்டம் நாகர்கோவிலில் இருந்து இயக்க தயாராக இருக்கும். ஆனால் திருநெல்வேலி- மதுரை மார்க்கம் இயங்கும் எந்த ஒரு ரெயிலுக்கும் எளிதாக திருவனந்தபுரம் கோட்டத்தால் அனுமதி கிடைத்து விடாது.

திருநெல்வேலி- பனஸ்வாடி (பெங்களூரு) சிறப்பு ரெயில் திருநெல்வேலிக்கு காலை 8:45 மணிக்கு வந்து விட்டு இரவு 22:15 மணிக்குதான் புறப்பட்டு செல்கிறது. இதுவரை இந்த பெட்டிகள் காலியாகவே திருநெல்வேலியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டதை நாகர்கோவில் அல்லது கன்னியாகுமரி அல்லது திருவனந்தபுரம் வரை இயக்க திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் அனுமதிக்க மாட்டார்கள்

எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், செங்கோட்டை, ராஜபாளையம், விருதுநகர் வழியாக வேளாங்கண்ணி செல்ல வசதியாக வாராந்திர சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருவனந்தபுரம் கோட்டம் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு ஒரு சிறப்பு ரெயில் கூட இயக்க தயாராக இல்லை.

திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள 625 கி.மீ. தூரம் உள்ள இருப்புபாதை வழித்தடத்தில் கன்னியாகுமரி நாகர்கோவில்- திருவனந்தபுரம் 87 கி.மீ. தூரமும், நாகர்கோவில் திருநெல்வேலி 74 கி.மீ. தூரம் ஆக மொத்தம் 161 கி.மீ. தூரம் உள்ள ரெயில்வே இருப்புபாதை சுமார் 25 சதமானம் நாகர்கோவில் துணை கோட்டத்தின் கீழ் வருகின்றது. இதில் தமிழகத்தில் சுமார் 130 கி.மீ. இருப்பு பாதையும், கேரளாவில் 31கி.மீ. தூரத்துக்கு இருப்பு பாதையும் உள்ளது. அப்போது கொடுக்கப்பட்ட உறுதிமொழியின்படி குமரி மாவட்ட ரெயில்வே வழித்தடங்களை அதாவது நாகர்கோவில் துணை கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரி-நாகர்கோவில் பாலராம புரம் மற்றும் நாகர்கோவில் திருநெல்வேலி வரை உள்ள பாதையை மீண்டும் மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று ரெயில்வே பயணிகள் சங்கத்தினர் வற்புறுத்தி உள்ளனர்.



Tags:    

Similar News