செய்திகள்
கோப்புபடம்

குற்றச்சம்பவங்களை தடுக்க வெள்ளகோவிலில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படுமா?

Published On 2021-09-20 10:07 GMT   |   Update On 2021-09-20 10:07 GMT
தற்போது உள்ள காவல்துறையினரை வைத்து அனைத்து கிராமங்களையும் கண்காணிக்கவும், குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தவும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடவும் முடியாத நிலை உள்ளது.
வெள்ளகோவில்:

வெள்ளகோவிலில் கடந்த 1941ம் ஆண்டு காவல் நிலையம் தொடங்கப்பட்டது. கிழக்கே கரூர் மாவட்ட எல்லையான குருக்கத்தி வரையும், மேற்கு காங்கேயம் காவல் நிலைய எல்லையான கொளிஞ்சிகாட்டுவலசு வரையும், வடக்கே ஈரோடு மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையம் வரையும், தெற்கே மூலனூர் காவல் நிலைய எல்லையான புதுப்பை வரையும் வெள்ளகோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளாகும்.

இந்த காவல் நிலைய எல்லையில் 9 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் ஆண்கள் 53 ஆயிரத்து 475 பேரும், பெண்கள் 41 ஆயிரத்து 951 பேரும் என மொத்தம் 95 ஆயிரத்து 426 பேர் உள்ளனர். 

வெள்ளகோவில் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசித்தி பெற்ற வீரகுமாரசாமி கோவில்,கண்ணபுரம் மாரியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் நாட்ராயன் சுவாமி கோவில், சின்னமுத்தூர் செல்லாண்டியம்மன் கோவில், முத்தூர் குப்பண்ணசாமி கோவில் ஆகிய திருக்கோவில்கள் உள்ளன.

இப்பகுதியில் நூல் மில்கள், ஆயில் மில்கள், விசைத்தறி கூடங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிகமாக உள்ளன. நூல்மில்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகமானோர் வந்து மில் வளாகத்தில் தங்கி வேலை செய்து வருகின்றனர். 

ஞாயிறுதோறும் வெள்ளகோவிலில் நகராட்சி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. சனிக்கிழமையன்று முத்தூரில் பேரூராட்சி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது.

வெள்ளகோவிலில் நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நில வருவாய் அலுவலர் அலுவலகம், முத்தூரில் பேரூராட்சி அலுவலகம் உள்ளன. மேலும் வெள்ளகோவில் திருச்சி-கோவை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாகவே இருக்கும். தற்போது வெள்ளகோவில் தாலுகாவாக தரம் உயர்த்த வருவாய்த்துறையால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது வெள்ளகோவில் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், 3 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 4 தலைமை காவலர்கள், 16 முதல் நிலை காவலர்கள், 15 இரண்டாம் நிலை காவலர்கள் என மொத்தம் 41 பேர் பணியாற்றி வருகின்றனர்.  

தற்போது உள்ள காவல்துறையினரை வைத்து அனைத்து கிராமங்களையும் கண்காணிக்கவும், குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தவும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடவும் முடியாத நிலை உள்ளது. 

இதனால் அவ்வப்போது சிறு சிறு குற்ற சம்பவங்கள், ஆள் கடத்தல்,வழிப்பறி, கொள்ளை, கொலை, வாகன விபத்துகள் நடைபெற்று வருகின்றன .

எனவே அனைத்து கிராமங்களை  கண்காணிக்கவும் குற்ற சம்பவங்களை தடுக்கவும் வெள்ளகோவில் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கூடுதலாக ஒரு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News