செய்திகள்
ரம்மி

ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய சட்டம் இயற்ற எவ்வளவு காலமாகும்?: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

Published On 2020-11-18 10:58 GMT   |   Update On 2020-11-18 10:58 GMT
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடைசெய்ய சட்டம் இயற்ற எவ்வளவு காலமாகும்? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர்கள் உயிரை மாய்க்கும் சம்பவம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் ரம்மி உள்பட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடைசெய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ‘‘ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்காக சட்டம் இயற்ற எவ்வளவு காலம் தேவைப்படும்? சட்டமாக இயற்றப்படுமா? விதியாக அமல்படுத்தப்படுமா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது?’’ எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில் ‘‘சட்டப்பேரவை கூட்டப்படவில்லை என்பதால் அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க முடியவில்லை. ஆன்லைன் சூதாட்டங்கள் தடை செய்யப்படும் என முதல்வர் ஏற்கனவே உறுதி அளித்துள்ளார். அதை தடை செய்ய அதிக முக்கியத்துவம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தது.

பின்னர் நீதிபதிகள் ‘‘பிரபலங்கள் பலர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு விளம்பரம் செய்வது வேதனை அளிக்கிறது. சினிமா நடிகர்களை பின்பற்றும் நிலை தமிழகத்தில் உள்ளது. விலை மதிப்பற்ற உயிர்கள் பல ஆன்லைன் விளையாட்டுகளால் பறிபோகின்றன. பல ஆன்லைன் விளையாட்டுகளால் உயிர்கள் பறிபோவதை தடுக்க விரைந்து முடிவெடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தனர்.
Tags:    

Similar News