செய்திகள்
கொரோனா தடுப்பூசி

மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி போடுவது நிறுத்தம்

Published On 2021-06-08 09:54 GMT   |   Update On 2021-06-08 09:54 GMT
கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கியது முதல் தற்போது வரை பொதுமக்களுக்கு தடையின்றி தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன.

மதுரை:

மதுரை மாவட்டத்தில் ஜனவரி 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 6-ந்தேதி வரை 3 லட்சத்து 71 ஆயிரத்து 679 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதுரை மாவட்ட சுகாதார துறையினரிடம் இருப்பில் இருந்த 1430 கொரோனா தடுப்பூசிகளும் நேற்று முழுமையாக செலுத்தப்பட்டு விட்டன.

இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் முழுமையாக தீர்ந்து கையிருப்பில் இல்லை. இதனால் நேற்று தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து மதுரையில் இன்று முதல் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நகர் நல அலுவலரும், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநருமான (பொறுப்பு) குமரகுருபரன் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கியது முதல் தற்போது வரை பொதுமக்களுக்கு தடையின்றி தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன.

தற்போது மாவட்ட சுகாதார துறையினரிடம் இருப்பில் இருந்த கொரோனா தடுப்பூசிகள் முழுமையாக தீர்ந்து விட்டன. எனவே மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால் முதல் முறையாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்த அறிவிப்புகளை அரசு மருத்துவ மனைகளிலும், ஆரம்ப சுகாதார மையங்களிலும் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதேபோல் தடுப்பூசி முகாம்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசிகள் வந்த உடன் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News