செய்திகள்
அரசு பஸ்சில் படிக்கட்டு உடைந்து இருப்பதையும், உடைந்த படிக்கட்டை கண்டக்டர் எடுத்துச் சென்றதையும் காணலாம்.

அரசு பஸ்சின் படிக்கட்டு திடீரென உடைந்து விழுந்தது - அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பினர்

Published On 2021-11-24 14:07 GMT   |   Update On 2021-11-24 14:07 GMT
மயிலாடுதுறையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசு பஸ்சின் படிக்கட்டு திடீரென உடைந்து விழுந்தது. இதில் அந்த பஸ்சில் பயணம் செய்த மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை ஒரு அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு பொறையாறுக்கு புறப்பட்டு சென்றது. பஸ்சில் 90-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். மேலும் பஸ்சின் படிக்கட்டுகளில் கல்லூரி மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். மயிலாடுதுறை கொத்தத்தெரு பெரிய மாரியம்மன் கோவில் அருகே தரங்கம்பாடி சாலையில் சென்றபோது பஸ்சின் பின்பக்க படிக்கட்டு திடீரென உடைந்து கீழே விழுந்தது. அப்போது சுதாரித்து கொண்ட மாணவர்கள் படியில் இருந்து மேலே ஏறிக்கொண்டனர். இதனால் எந்தவித காயமும் இன்றி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

படிக்கட்டு உடைந்தது தெரியாமல் பஸ்சை டிரைவர் ஓட்டி சென்றார். மாணவர்கள் சத்தம் போட்டதும் சத்தம் கேட்டு பஸ்சை டிரைவர் நிறுத்தினார். இதனைத்தொடர்ந்து பஸ்சில் இருந்து கண்டக்டர் கீழே இறங்கி உடைந்து கீழே கிடந்த படிக்கட்டை எடுத்து வந்தார். பின்னர் அங்்கிருந்து பஸ் புறப்பட்டு சென்றது.

பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ்சில் இருந்து படிக்கட்டு உடைந்து விழுந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமும் காலை நேரத்தில் மாணவர்கள் பஸ்களில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பஸ்சில் இருந்து மாணவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடையும் சம்பவங்களும் அதிகளவில் நடந்துள்ளன.

எனவே காலை, மாலை என இரு வேளைகளிலும் கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் உள்ள பஸ்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News