செய்திகள்
புலி

டி23 புலி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுமா?- வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை

Published On 2021-10-28 09:27 GMT   |   Update On 2021-10-28 09:27 GMT
மசினகுடியில் பிடிக்கப்பட்ட டி23 புலிக்கு காயங்கள் இருந்ததால் மைசூரு பூங்காவில் உள்ள மறுவாழ்வு மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி சுற்று வட்டார பகுதிகளில் சுற்றி திரிந்த டி.23 என்ற ஒற்றை புலி 3 பேரையும், 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அடித்து கொன்றது. இந்த புலியை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விட்டதை அடுத்து வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

21 நாட்களுக்கு பிறகு கடந்த 15-ந் தேதி ஆட்கொல்லி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். புலிக்கு உடலில் காயங்கள் இருந்ததை அடுத்து சிகிச்சைக்காக மைசூருவில் உள்ள மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு புலிக்கு கால்நடை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

தொடர் சிகிச்சை காரணமாக புலி நாளுக்கு நாள் தீவிர குணமடைந்து வருகிறது. மேலும் உணவும் சீராக உட்கொள்கிறது. இதையடுத்து இந்த புலியை மைசூர் பூங்காவில் வைத்து பராமரிக்கலாமா? அல்லது சென்னை வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு செல்லமா? என வனத்துறையினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

மசினகுடியில் பிடிக்கப்பட்ட டி23 புலிக்கு காயங்கள் இருந்ததால் மைசூரு பூங்காவில் உள்ள மறுவாழ்வு மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள் அளித்து வரும் தொடர் சிகிச்சையின் காரணமாக புலியின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. புலி நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. மேலும் இறைச்சியையும் சாப்பிடுகிறது. இருப்பினும் தொடர்ந்து புலியை கண்காணித்து வருகிறோம்.

தற்போது வரை புலியை வேறு இடத்திற்கு மாற்றும் எந்தவித முயற்சியோ, ஆலோசனைகளோ நடைபெறவில்லை.

புலி முழுவதுமாக குணம் அடைந்த பிறகு உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து புலியை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்று பராமரிக்கலாமா? அல்லது இங்கு வைத்தே பராமரிக்கலாமா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News