செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம்

ஆரணி அருகே டேங்கர் லாரியில் கடத்திய ரூ.1 கோடி எரிசாராயம் பறிமுதல்

Published On 2019-09-18 10:56 GMT   |   Update On 2019-09-18 10:56 GMT
ஆரணி அருகே டேங்கர் லாரியில் கடத்திய ரூ.1 கோடி மதிப்புள்ள எரிசாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் 2 லாரி, 4 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
ஆரணி:

விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வழியாக எரிசாராயம் கடத்தப்படுவதாக விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நேற்று இரவு விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் ஆரணி நெடுஞ்சாலையில் நெசல் கிராமத்தின் அருகே வாகன சோதனை நடத்தினர்.

அப்போது விழுப்புரத்திலிருந்து ஆரணி நோக்கி வந்த கர்நாடக மாநிலம் பதிவு எண் கொண்ட டேங்கர் லாரியை மடக்கி சோதனையிட முயன்றனர். ஆனால் லாரி நிற்காமல் வேகமாக சென்றது. போலீசார் அதனை ஜீப்பில் விரட்டி சென்றனர். வேகமாக சென்ற லாரி அங்குள்ள விவசாய நில பகுதிக்குள் புகுந்தது.

ஆரணி பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் சேரும் சகதியாக இருந்தன.

இதனால் விவசாய நிலத்துக்குள் சென்ற டேங்கர் லாரி சேற்றில் சிக்கியது.

லாரியில் வந்த கும்பல் இதுபற்றி அவர்களது கூட்டாளிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மற்றொரு லாரி மேலும் 4 பேர் பைக்கில் வந்தனர். அவர்கள் டேங்கர் லாரியில் இருந்த எரி சாராயத்தை மற்றொரு லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது விரட்டி வந்த போலீசார் அங்கு வந்தனர். போலீசாரை கண்டதும் கடத்தல் கும்பல் தப்பி ஓடிவிட்டனர்.

போலீசார் 500 கேன்களில் இருந்து 25 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் கடத்தல் கும்பல் விட்டு சென்ற 2 லாரி, 4 பைக் பறிமுதல் செய்யப்பட்டன.

கடத்தலில் 4-க்கும் மேற்பட்டோர் இருந்தது தெரியவந்தது. அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆரணி பகுதியில் 25 ஆயிரம் லிட்டர் எரிசாரயம் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேங்கர் லாரி சேற்றில் சிக்கிய சிறிது நேரத்தில் மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆரணியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்று மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News