செய்திகள்
கோப்புப்படம்

வேட்பாளர்களின் தேர்தல் செலவு உச்சவரம்பு 10 சதவீதம் உயர்வு - மத்திய அரசு அனுமதி

Published On 2020-10-20 20:39 GMT   |   Update On 2020-10-20 20:39 GMT
தேர்தலில் வேட்பாளர்கள் மேற்கொள்ளும் செலவு உச்சவரம்பு 10 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் ரூ.30 லட்சத்து 80 ஆயிரம் வரை செலவழிக்கலாம்.
புதுடெல்லி:

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்கு சேகரிப்புக்காக செலவிடும் தொகைக்கு ஒரு வரைமுறை உள்ளது. இந்த வரைமுறையை மீறினால் அவர்கள் ஊழல் நடவடிக்கைக்கு ஆட்பட வேண்டியிருக்கும். இந்த வரைமுறையின்படி தமிழகம் உள்பட பல மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.70 லட்சம் செலவு செய்யலாம் என்றும், சட்டசபை தேர்தலாக இருந்தால் ரூ.28 லட்சம் செலவு செய்யலாம் என்றும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதைவிட குறைவான தொகை உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இந்த உச்சவரம்பு தற்போது 10 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. கொரோனோ நோய் பரவல் காரணமாக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் பல சிரமங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பதை காரணம் காட்டி, 10 சதவீத உயர்வுக்கு அனுமதி அளிக்கலாம் என்று, மத்திய அரசுக்கு இந்திய தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்தது. இதனை ஏற்று 10 சதவீத தொகை உயர்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை சட்ட அமைச்சகம் வெளியிட்டது.

இதன்படி ரூ.70 லட்சம் என்று இருந்த வேட்பாளர்களின் நாடாளுமன்ற தேர்தல் செலவு உச்சவரம்பு, ரூ.77 லட்சம் ஆக உயர்ந்து உள்ளது. ரூ.28 லட்சமாக இருந்த சட்டசபை தேர்தல் செலவு உச்சவரம்பு ரூ.30 லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்து உள்ளது.

ஏற்கனவே, செலவு உச்சவரம்பு தொகை குறைவாக உள்ள மாநிலங்களிலும் அந்த தொகையில் இருந்து 10 சதவீத தொகை உயர்ந்து இருக்கிறது.
Tags:    

Similar News