பெண்கள் உலகம்
சேமிப்பு

சேமிப்போம்... வாழ்வை வளமாக்குவோம்....

Published On 2022-02-17 03:18 GMT   |   Update On 2022-02-17 07:35 GMT
வருங்காலத்திற்கு தேவையான பாதுகாப்பாய் பொருளை சேர்த்திருக்கிறோம் என்கின்ற நிறைவு வருங்காலத்தைப் பற்றிய பயத்தை போக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
சேமிப்பது என்பது பாரம்பரியமாக நம்மிடம் இருந்து வந்த பழக்கம். உதாரணமாக சொல்லப்போனால் பெண்கள் தினமும் சமைப்பதற்கு அரிசி எடுக்கும் பொழுது ஒரு கைப்பிடி அரிசியை எடுத்து ஒரு பானையில் போடுவார்கள். ஒரு மாதத்தில் அந்த குறிப்பிட்ட பானையில் சேரும் அரிசி வறியவர்களுக்கு உதவும், சமயங்களில் அந்த அரிசியை மளிகை கடையில் கொடுத்து வேறு பண்டங்களை வாங்கி கொள்ளவும் செய்வார்கள்.

அதேபோல அறுவடை முடிந்து நெல்மணிகளை விற்று வந்த காசில் முதல் செலவு என்று குறிப்பிட்ட பணத்தை எடுத்து சேமிப்பில் வைப்பார்கள். மழை பொய்த்து விளைச்சல் இல்லாத போது அந்த பணம் உதவும். ஆனால் இன்று நாம் நமக்கு வருகின்ற வருமானத்தில் என்ன செய்கிறோம்? முதல் செலவாக கடன் அட்டை களுக்கும் மாத தவணையில் வாங்கிய பொருள்களுக்கு தவணை கட்டுவது மாக உள்ளது.

வருகின்ற வருவாயில் ஒரு பகுதியை சேமிப்பது என்ற காலம் மாறி இனி வரக்கூடிய வருமானத்தில் இப்போதே கடன் வாங்கி விடுவது என்ற காலம் நிலவுகிறது. குறிப்பாக இந்த பேன்டமிக் எனப்படும் நோய்த்தொற்று காலத்தில் வேலை இல்லா பிரச்சனையும் வருமான குறைவும் அதிகம் பேரை பாதித்துள்ளது. இப்போது நன்றாக கவனித்தோம் என்றால் தங்கள் வருவாயில் சேமித்தவர்கள் மட்டுமே பெரிய பிரச்சனைகளுக்கு ஆளாகாமல், இன்னும் சொல்லப்போனால் சிலர் லாக் டவுன் காலத்தில் குடும்பத்துடன் வீட்டில் நிம்மதியாக இருந்தனர்.

சேமிப்பும் இல்லாமல் வருங்கால வருமானத்தை நம்பி கடன் வாங்கியவர்கள் எல்லாம் மிக துயரமான சூழலுக்கு உள்ளாக்கப்பட்டனர். இது ஒன்றே நமக்கு சரியான பாடம் சேமிப்பு எந்த அளவிற்கு முக்கியம் என்பதற்கு. பொருளாதார விஷயத்தில் மிக முக்கிய காரணி வருங்காலத்திற்கு சேமித்து வைப்பதே! உங்கள் குழந்தைகளுக்கான படிப்பு, திருமணம் மற்றும் உங்கள் வயோதிக காலத்திற்கு தேவைப்படும் பணம் எவ்வளவு என்பதை அனுமானித்து இப்போதே நீங்கள் சிறிது சிறிதாக சேமிக்கத் தொடங்கினால் போதும். ஒருவர் வாழ்வை ரசித்து நிறைவாய் நிம்மதியாய் வாழ வேண்டுமென்றால் அவருக்கு வருங்காலம் பற்றிய பயம் இருக்கக்கூடாது.

வருங்காலத்திற்கு தேவையான பாதுகாப்பாய் பொருளை சேர்த்திருக்கிறோம் என்கின்ற நிறைவு வருங்காலத்தைப் பற்றிய பயத்தை போக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது பழமொழி. அதாவது பசுமரத்து ஆணி போல இளம் வயதில் நமக்கு கற்பிக்கப்படும் பழக்கவழக்கங்கள் நம்முடன் எப்போதும் இருக்கும். எனவே நம் குழந்தைகள் அனைவருக்கும் சேமிக்கும் பழக்கத்தை சொல்லிக் கொடுப்போம். சேமிப்பு பழக்கம் நம் வாழ்க்கையை வளமாக்கி நம் வருங்காலத்தையும் சிறப்பாக்கும்.
Tags:    

Similar News