லைஃப்ஸ்டைல்
பெற்றோர்களின் இந்த செயலால் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகும் குழந்தைகள்

பெற்றோர்களின் இந்த செயலால் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகும் குழந்தைகள்

Published On 2021-05-29 06:24 GMT   |   Update On 2021-05-29 06:24 GMT
பெற்றோர்கள் குழந்தைகளின் குறைகளையே சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தால் அந்த குறைகள் அவர்களிடம் விடாப்பிடியான கறையாகி மாறி விடும் வாய்ப்புண்டு.
பிள்ளைகளை நாம் ஒவ்வொன்றுக்கும் குறை சொல்லிக் கொண்டிருக்கும் போது அவர்கள், “தாங்கள்” எதற்கும் தகுதி இல்லாதவர்கள் என தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகி தன்னிடம் ஏதோ குறை இருப்பதாக நம்பத் தொடங்கி விடுகிறார்கள். அதனால் மற்றவர்களை விட்டும் தனித்து இருப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். தன் மனதில் இருப்பதை பிறரிடம் சொல்ல அச்சப்பட்டு தனக்குள்ளே பேசிக்கொள்ளும் இயல்பை வளர்த்துக் கொள்வதோடு, தன் பெற்றோர்கள் தங்களை வெறுக்கிறார்கள் என மன உளைச்சலுக்கும் அவர்கள் ஆளாகி விடுகிறார்கள் என அச்சுறுத்துகிறது வாழ்வியல்.

தவிர, குறைகளோடும் நிறைகளோடும் தன்னை நேசிக்க நம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்தால் தானே, அப்படி தன்னை நேசிக்கக் கூடிய ஒருவராக நம் பிள்ளைகளை நாம் வளர்த்தால் தானே அவர்களாலும் குறை களோடும் நிறைகளோடும் மற்றவர்களை ஏற்றுக் கொண்டு நேசிக்க முடியும். இல்லையென்றால் இப்படித்தானே அவர்களும் மற்றவர்களிடம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருப்பார்கள்.

உண்மையில், குறை சொல்ல வேண்டிய கட்டாயம் தவிர்க்க முடியாமல் ஏற்படுமாயின், நாம் கொஞ்சம் நேரம் அதற்காக ஒதுக்கி நாம் எதற்காக இந்தக் குறையை சொல்கிறோம், அந்தக் குறையை மட்டும் திருத்திக்கொண்டால் அந்தப் பிள்ளை எவ்வளவு பெரிய சாதனையாளனாக வரமுடியும் என்று நம்பிக்கை கொடுக்கக்கூடியதாக அது இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ஒரு குறையை சொல்ல முற்படும் போது அந்தக் குழந்தையுடைய பத்து நிறைகளை அது தாங்கி வர வேண்டும்.

நீ சோம்பேறி, நீ எதற்கும் இலாயக்கில்லாதவன் என்று நம் பிள்ளைகள் நன்றாக வரவேண்டும் என பெற்றோர்கள் போகிற போக்கில் குறை சொல்லிவிடலாம். ஆனால் இதை மீண்டும் மீண்டும் ஒரு பிள்ளை கேட்கும் போது அதை அவன் ஆழ்மனம் நம்பத் தொடங்கி அவனையு மறியாமல் அவன் அதுவாகவே மாறி விடுகிறான்.

குறைகளைக் கேட்டு கேட்டு வளரும் பிள்ளைகள் வளர்ந்த பிறகும் யார் என்ன சொன்னாலும் அது அவர்களுக்கு குறை சொல்வதாகவேப்படும். மனதில் ஆறாத ரணம் ஏற்பட்டு என்றென்றும் அது ஒரு உறுத்தலாகவே மாறி விடுகிறது. அதனால் நாம் அவர்கள் நிறையில் கவனம் வைத்து,முற்றிலுமாக குறை சொல்வதை தவிர்த்து விடுவது அல்லது முடிந்த வரை குறைத்து விடுவது தான் நல்லது.

குறைகளை சுட்டிக் காட்டுவதை விட்டும் நிறைகளைக் காண்பதே சிறந்த பலன் தரும்” என அறிவுறுத்துகிறார் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த புத்த தத்துவவாதியும் சிறந்த கல்வியாளருமான “டைசகு இக்கிடா”.நிறைகள் பெரும்பான்மையாக சுட்டிக் காட்டப் படும்போது குறைகள் தானாக நிவர்த்தி செய்யக் கூடியதாக ஆகிவிடும் என ஆருடம் சொல்கிறார் அமெரிக்க பத்திரிகையாளர் “ஜூடித் மார்ட்டின்”.

இதில் ஆழ்மன இயல் சொல்லும் இரகசியம் என்ன தெரியுமா, நீங்கள் அவர்களின் நிறைகளைப் பார்த்து தட்டிக் கொடுத்தால் அதில் அவர்கள் கவனம் செல்லும். அந்த நிறை வட்டம் பெரிதாகிக் கொண்டே போகும். அப்படிப் போகப் போக நீங்கள் சுட்டிக் காட்டாத, கவனிக்கப்படாத குறைகள் சுருங்கி, சுருங்கி, ஒரு புள்ளியாய் மறைந்து அவர்களை விட்டும் நீங்கி விடும் அல்லது அது அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இல்லாமல் மாறி விடும்.

ஆனால் அதே நேரம் நீங்கள் குறைகளையே சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தால் அந்த குறைகள் அவர்களிடம் விடாப்பிடியான கறையாகி மாறி விடும் வாய்ப்புண்டு என்று நமக்கு எச்சரிக்கை தருகிறது. உண்மைதானே எதற்கு தண்ணீர் ஊற்று கிறோமோ, அது தானே உயிர் பெறும்.

Email:fajila@hotmil.com
Tags:    

Similar News