ஆன்மிகம்
முத்தாரம்மன்

கோவை சங்கனூரில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா தொடக்கம்

Published On 2021-10-07 07:14 GMT   |   Update On 2021-10-07 07:14 GMT
கோவை சங்கனூரில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் வருகிற 13-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை 3 நாட்களுக்கு பக்தர்கள் பல்வேறு வேடம் தரித்து தசரா, காளி ஆட்டம் ஆட உள்ளனர்.
கோவை சங்கனூர்-நல்லாம்பாளையம் ரோட்டில் புகழ்பெற்ற ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தசரா விழா கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டிற்கான தசரா விழா நேற்று முன்தினம் தொடங்கியது.

இதனை முன்னிட்டு அன்றைய தினம் காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமமும், மதியம் 12 மணிக்கு பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 7 மணிக்கு சங்கனூர் மாகாளியம்மன் கோவிலில் இருந்து முத்தாரம்மன் கோவிலுக்கு தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

இரவு 10 மணிக்கு அம்மை, அப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், நள்ளிரவு 12 மணிக்கு மாகாளி பூஜையும் நடந்தது. இதையடுத்து நேற்று காலை 9 மணிக்கு முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் சூழ முகூர்த்த கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நடப்பட்டது. இதில் சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து வருகிற 13-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை 3 நாட்களுக்கு பக்தர்கள் பல்வேறு வேடம் தரித்து தசரா, காளி ஆட்டம் ஆட உள்ளனர். முகூர்த்தகால் நடும் விழாவை முன்னிட்டு முத்தாரம்மன் நேற்று துர்க்கை அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
Tags:    

Similar News