செய்திகள்
பெருஞ்சாணி அணை

பெருஞ்சாணி அணையில் இருந்து 400 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்

Published On 2021-06-08 09:15 GMT   |   Update On 2021-06-08 09:15 GMT
தற்போது அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து குறையத் தொடங்கியதையடுத்து பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரும் நிறுத்தப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு-1, சிற்றாறு-2, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் நிரம்பி வழி கிறது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கூடுதல் தண்ணீர் வந்ததையடுத்து அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது. திறந்த சில மணி நேரத்தில் அணை மூடப்பட்டது. அணையில் இருந்து உபரிநீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வந்தது.

தற்போது அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து குறையத் தொடங்கியதையடுத்து பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரும் நிறுத்தப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் குறைக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கி உள்ளது. திற்பரப்பு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் குறைந்துள்ளது. திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.06 அடியாக உள்ளது. அணைக்கு 214 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.28 அடியாக உள்ளது. அணைக்கு 504 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 400 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 16.89 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 16.99 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 26.60 அடியாகவும் உள்ளது.

Tags:    

Similar News