செய்திகள்
பெண்ணுக்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தையல் எந்திரத்தை வழங்கியபோது எடுத்தபடம்.

4-வது குடிநீர் திட்ட பணிகள் நிறைவடைந்தால் திருப்பூரில் தினமும் குடிநீர் வினியோகம் - பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு

Published On 2021-02-24 21:58 GMT   |   Update On 2021-02-25 10:01 GMT
4-வது குடிநீர் திட்ட பணிகள் நிறைவடைந்து விட்டால், திருப்பூரில் தினமும் ஒரு மணிநேரம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
அனுப்பர்பாளையம்:

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை மற்றும் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் 5073 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் சிவன் தியேட்டர் 60 அடி சாலையில் நடைபெற்றது. விழாவுக்கு மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் டாக்டர் வி.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை இணை செயலாளர்கள் பழனிசாமி, மகேஷ்ராம், நீதிராஜன் ஆகியோர் வரவேற்றனர். ஜெயலலிதா பேரவை தலைவர் லோகநாதன், இணை செயலாளர்கள் ராமலிங்கம், ராஜலிங்கம், ராஜேஷ்கண்ணா, பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாடாளுமன்ற குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியன் எம்.பி., தலைமை கழக பேச்சாளர் போண்டா மணி, மாநில அமைப்பு செயலாளர்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சி.சிவசாமி, எம்.எல்.ஏ.க்கள் கே.என்.விஜயகுமார், சு.குணசேகரன், மாநகர் மாவட்ட துணை செயலாளர் ஜான் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் மாநகர் மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை துணை செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு நலஉதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

எத்தனையோ தலைவர்கள் வாழ்ந்து மறைந்தாலும் காந்தி, காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களின் பெயர்கள் இன்றும் வரலாறு சொல்லும் அளவுக்கு உள்ளது. குறிப்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்தாலும் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் பெயர் அழியாது. எனவேதான் இன்று அவருடைய நினைவாக 5073 பேருக்கு நலஉதவிகள் வழங்கப்படுகிறது.

மேலும் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதியில் தலா 1 லட்சம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் தற்போது தமிழகத்தில் அனைத்து மக்களும் விரும்பும் நல்லாட்சி நடைபெற்று வருகிறது.

குறிப்பாக தொழில் நகரமான திருப்பூருக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. திருப்பூரில் 4-வது குடிநீர் திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒருசில மாதங்களில் பணிகள் நிறைவடைந்து விட்டால் தினமும் 1 மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு என்பதே இருக்காது. இந்த திட்டம் விரைவில் நிறைவடைய உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்று, மீண்டும் அ.தி.மு.க. 3-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஏழை தாய்மார்களுக்கு சேலை, மாணவர்களுக்கு கல்வி உபகரணம், ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம், சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் உள்பட 5073 பயனாளிகளுக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டது. முடிவில் ஜெயலலிதா பேரவை இணை செயலாளர்கள் உஷா ரவிக்குமார், ஜீப்ரா ரவி ஆகியோர் நன்றி கூறினார்கள். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் டாக்டர் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் பொதுக்குழு உறுப்பினர் பூலுவப்பட்டி பாலு, பகுதி செயலாளர்கள் கருணாகரன், கணேஷ், பட்டுலிங்கம், ஹரிஹரசுதன், சுப்பு, வேலுமணி, பாலசுப்பிரமணியம் உள்பட ஜெயலலிதா பேரவை துணை, இணை செயலாளர்கள், வார்டு நிர்வாகிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News