ஆன்மிகம்
திருவாலங்காடு ஆலயம்

மாந்தி தோஷத்தை போக்கும் பரிகாரத்தலங்கள்

Published On 2021-08-14 07:34 GMT   |   Update On 2021-08-14 07:34 GMT
எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் இறந்தவர்களைப் பற்றி விமர்சனம் செய்து பேசாதீர்கள். அது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினரையும் பாதிக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
சனி பகவானுக்கு இரண்டு மைந்தர்கள் ஒருவர் மாந்தி, மற்றொருவர் குளிகன். இதில் குளிகன் சனி பகவானுக்கும் நீலா தேவிக்கும் பிறந்தவர். ஆனால் மாந்தி சனியின் வெட்டுப்பட்ட காலில் இருந்து உருவானவர்.

வெட்டுப்பட்ட கால் என்றாலே அது சவத்துக்கு சமம். எனவே சவ ஊர்வலங்கள் வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்வதும், இறந்தவரின் ஆன்மாவுக்காக ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்வதும், சவ அடக்கத்துக்கு நம்மால் முயன்ற உதவிகளைச் செய்வதும், மாந்தியின் தோஷத்தை வெகுவாகக் குறைக்கும். இன்னும் சொல்லப்போனால் மாந்தி தோஷம் இல்லாமலே போகும்!

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பக்கத்தில் திருநரையூர் எனும் ஸ்தலத்தில் சனிபகவான் தனிச்சந்நிதியில் எழுந்தருளுகிறார். அதுமட்டுமா? தன் மனைவி நீலாதேவி மகன்கள் குளிகன் மற்றும் மாந்தி என குடும்பத்தோடு அருள்பாலிக்கிறார். அங்கே சென்று முறையாக பூஜை செய்து வழிபட்டால் மாந்தி தோஷம் விலகும்.

பஞ்ச சபைகளில் ஒன்றான திருவாலங்காடு ஆலயம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. இந்தத் தலத்தில் மாந்தி வழிபட்ட லிங்கம் உள்ளது, அங்கே சென்று அந்த சிவலிங்கத்தை வழிபட்டாலும் மாந்தி தோஷம் நீங்கும்.

பட்டுகோட்டைக்கு அருகே விளங்குளம் எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயத்தில் சனி பகவான் குடும்பத்தோடு காட்சி தருகிறார். அங்கே சென்று வழிபட்டாலும் மாந்தி தோஷம் இல்லாமல் போகும்.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிலும் குறிப்பாக கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்தவரை உதவி செய்யுங்கள். அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுத்து இந்த மாந்தி தோஷத்தின் வீரியத்தைக் குறைத்துக்கொள்ளலாம். குறிப்பாக புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் விரைவாக புத்திர பாக்கியம் பெறுவார்கள்.

குடும்பத்தில் அமைதியின்மை, நிம்மதியற்ற நிலை, வருமானம் போதுமான அளவிற்கு இல்லையே என்று கலங்குபவர்கள், குடும்பத்தினர் ஆளுக்கொரு பக்கம் பணிபுரிந்து கொண்டு சேர்ந்து வாழ முடியாமல் தவிப்பவர்கள் என்றிருந்தால், மேற்கண்ட பரிகாரங்கள் மிகப்பெரிய பலன்களைக் கொடுக்கும்! பிரச்சினைகள் விரைவாகத் தீரும். தொடர்ந்து சிவபெருமானை வழிபாடு செய்வதும், தினமும் காலையில் சூரிய வழிபாடு செய்வதும், ஆதித்யஹிருதயம் கேட்டு வருவதும் மாந்தி தோஷத்தின் வீரியத்தைக் குறைக்கும்.

பொதுவாக எந்த ஒரு மனிதர் இறந்தாலும் அவரை தூற்றுவது, அதாவது அவர் கெட்டவராகவே இருந்தாலும் இறந்த பிறகு அவரை தூற்றுவது "பிரேத சாபம்" என்னும் கடுமையான தோஷத்தைத் தரும். இதுவும் மாந்தி தோஷத்தில் ஒரு பகுதியே! எனவே எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் இறந்தவர்களைப் பற்றி விமர்சனம் செய்து பேசாதீர்கள். அது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினரையும் பாதிக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
Tags:    

Similar News