லைஃப்ஸ்டைல்
ஒன்பதாம் மாதம் : குழந்தையிடம் தாய் பேசலாம்

ஒன்பதாம் மாதம் : குழந்தையிடம் தாய் பேசலாம்

Published On 2020-10-05 05:57 GMT   |   Update On 2020-10-05 05:57 GMT
ஒன்பதாம் மாதம் குழந்தை கீழ்நோக்கி இறங்கி வருவதை அடிக்கடி தாயால் உணரமுடியும். குழந்தை தூங்கும்போது கண்களை மூடிக்கொள்ளவும், விழித்திருக்கும்போது கண்களை திறந்துகொள்ளவும் பழகிக்கொள்ளும்.
ஒன்பதாம் மாதம் குழந்தை கீழ்நோக்கி இறங்கி வருவதை அடிக்கடி தாயால் உணரமுடியும். குழந்தை தூங்கும்போது கண்களை மூடிக்கொள்ளவும், விழித்திருக்கும்போது கண்களை திறந்துகொள்ளவும் பழகிக்கொள்ளும். இந்த தருணத்தில் குழந்தையிடம் தாய் பேசத்தொடங்கவேண்டும்.

குழந்தையின் தலை கீழே இடுப்பு பகுதிக்கு இறங்கிவருவதால் வயிற்றில் பாரம் குறைந்ததுபோல் தோன்றும்.

கர்ப்பப்பையில் அழுத்தம் தோன்றுவதால் அடிக்கடி முதுகுவலி ஏற்படும். அவ்வப்போது சிறுநீர் கழிக்கும் எண்ணமும் உருவாகும்.

குழந்தையின் அசைவுகள் கடந்த மாதத்தைவிட குறைந்ததுபோல் தோன்றும்.

காலில் வீக்கம் ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம்தேவை.

பிரசவகாலம் நெருங்குவதால் தூக்கத்தில் கால்களில் தசை இழுத்துப் பிடித்து தொந் தரவு தரும்.

34-வது வாரத்தை கடக்கும்போது குழந்தையின் சுவாச கட்டமைப்புகள் மேம்பட்டு, முழுவளர்ச்சி பெற்று செயல்படத் தொடங்கும்.

குழந்தையை சுற்றியிருக்கும் கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதால், குழந்தை சிவப்பில் இருந்து ரோஸ் நிறத்திற்கு மாறும்.

குழந்தை தூக்கத்தில் கண்களை மூடியபடியும், விழிப்பில் கண்களை திறந்தபடியும் காட்சிதரும்.

குழந்தையின் நீளம் 47 செ.மீ. ஆகவும், எடை 2.7 கிலோவாகவும் இருக்கும்.

ஒன்பதாம் மாதத்திற்கு முன்பு குழந்தை பிறந்துவிட்டால் அதற்கு சுவாச தடை ஏற்படும். முகம் மற்றும் கை கால்களில் நீல நிறம் காணப்படும். சிசுக்களுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து இத்தகைய குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கவேண்டியதிருக்கும்.

ஒன்பதாம் மாதத்தில் பிரசவத்தை பற்றிய விஞ்ஞானபூர்வமான அறிவு தாய்மார்களுக்கு தேவை. பிரசவ வலி எப்படி இருக்கும்- பிரசவம் எப்படி நடக்கும்- குழந்தை வெளியேவரும்போது தாய்க்கு ஏற்படும் காயங்கள் பற்றி எல்லாம் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும். மகப்பேறு டாக்டரிடம் விளக்கம் கேட்டு அனைத்து சந்தேகங்களுக்கும் விடை தேடிக்கொள்ளவேண்டும். இது பற்றி சில மருத்துவமனைகளில் வகுப்புகள் நடத்தி, கணவன்- மனைவிக்கு புரியவைப்பார்கள்.

பிரசவத்தை பற்றி அச்சமூட்டக்கூடிய விஷயங்களை யாராவது சொன்னால் அதை காதுகொடுத்து கேட்கவேண்டாம். அனுபவம் கலந்த ஆலோசனை என்ற பெயரில் இந்த மாதிரி பேச வருபவர்களை தவிர்த்துவிடுங்கள். பயம், கவலை போன்ற எதுவும் இன்றி மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள்.

குழந்தையை வரவேற்க தேவையான ஏற்பாடுகளை இந்த மாதத்தில் இருந்தே செய்யத் தொடங்கவேண்டும்.

பிரசவ நேரத்தில் கைகொடுக்கும் சுவாச பயிற்சிகளை இந்த மாதத்தில் பெற்றுக்கொள்வது நல்லது.

இடுப்பு பகுதியில் அதிக வலி ஏற்படும். பிரசவத்திற்காக உடல் தயாராகுவதுதான் அந்த வலிக்கான காரணமாகும்.

குழந்தைக்கு பால் புகட்ட மார்பகத்தை தயார்ப்படுத்தவேண்டும். ‘நிப்பிள் மசாஜ்’ செய்து மார்பக காம்புகளை வெளியே கொண்டுவர முயற்சிக்கவேண்டும்.

தினமும் குழந்தையோடு சில நிமிடங்கள் பேசவேண்டும். குழந்தைக்காகவும், உங்களுக்காகவும் நல்ல பாடல்களையும் கேட்கவேண்டும்.

பிரசவ நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான பொருட்களை வகைப்படுத்தி ஒரு பெட்டியில் பாதுகாத்திடுங்கள். அது தாய்க்கும், குழந்தைக்கும் அத்தியாவசியமானதாக இருக்கவேண்டும்.

பிரவசத்திற்கு முந் தைய மாதம் என்பதால் அவ்வப்போது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடக்கும்போதோ, உடற்பயிற்சி செய்யும்போதோ சுவாச தடை, நெஞ்சு வலி, தசைப்பிடித்தம், உறுப்பில் இருந்து திரவம் வெளியேறுதல் போன்றவை இருந்தால் உடனே செயல்பாட்டை நிறுத்திவிடவேண்டும். மருத்துவ உதவியும் பெறவேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பும்- பின்பும் எளிதாக ஜீரணமாகும் உணவை சிறிதளவு உண்ணவேண்டும்.

இரண்டு வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது டாக்டர் பரிந்துரைக்கும் நாட்களிலோ வழக்கமான பரிசோதனைக்காக செல்வது அவசியம். குழந்தையின் தலை எங்கே இருக்கிறது என்பதை டாக்டரால் தொட்டுப்பார்த்து தெரிந்துகொள்ள முடியும். ரத்த அழுத்தம், உடல் எடை போன்றவைகளையும் பரிசோதிப்பது அவசியம்.

பிரசவத்திற்கு உடல் தயாராகும் இந்த காலகட்டத்தில் உடலுக்கு முழுமையான சத்துணவு அவசியம். தயாமின் நிறைந்த உணவுகள் உடலுக்கு அதிக சக்தியை தரும். வெள்ளை இறைச்சி, பிராக்கோலி, காய்கறிகள், கீரைகள், தானியங்கள் போன்றவைகள் உணவில் சேர்க்கப்படவேண்டும். இரும்புசத்தும் அவசியம்.
Tags:    

Similar News