செய்திகள்
வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு சென்ற காட்சி.

போதமலைக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள், உபகரணங்கள் தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்டன

Published On 2021-04-05 11:13 GMT   |   Update On 2021-04-05 11:13 GMT
ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட போதைமலைக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தேர்தல் அதிகாரிகள் மக்களின் உதவியுடன் தலைச்சுமையாக கொண்டு சென்றனர்.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டசபை தொகுதியில் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் போதமலை உள்ளது. இங்கு கீழூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழூர், மேலூர் மற்றும் கெடமலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்ல சாலைவசதி இல்லை. அதன் காரணமாக அங்கு வசிக்கும் பொதுமக்கள், ராசிபுரம் அருகே உள்ள வடுகம் கிராமத்தில் இருந்து போதமலையின் உச்சிக்கு சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவிற்கு கரடுமுரடான பாதையில் நடந்து சென்று வருகின்றனர்.

மேலும் உடல்நிலை சரி இல்லாதவர்களை கூட தொட்டில் கட்டி தூக்கிச் செல்ல வேண்டிய நிலையே நீடித்து வருகிறது. அதேபோல் தேர்தல் நேரங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தலைச்சுமையாக எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. போதமலையில் உள்ள கீழூரில் 902 வாக்காளர்களும், கெடமலையில் 322 வாக்காளர்களும் உள்ளனர்‌.

இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் அப்பகுதி மக்களின் உதவியோடு இன்று தலைச்சுமையாக போதமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. வடுகம் கிராமத்தில் உள்ள போதமலை அடிவாரத்தில் இருந்து மண்டல அலுவலர் விஜயகுமார் தலைமையில் வாக்குப்பதிவு அலுவலர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் போலீசார் என 12 பேர் கொண்ட குழுவினர் போதமலையில் உள்ள கீழூருக்கு காலை 9.30 மணி அளவில் புறப்பட்டு நடைபயணமாக சென்றனர்.

மேலும் முகக்கவசங்கள், கையுறைகள், கிருமி நாசினி உள்பட கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டியும் எடுத்து செல்லப்பட்டது.

இதுகுறித்து மண்டல அலுவலர் விஜயகுமார் கூறியதாவது:

நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி கீழூர் ஊராட்சி உண்டு உறைவிட பள்ளிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் உபகரணங்களை அப்பகுதி மக்கள் உதவியுடன் தலைச்சுமையாக கொண்டு செல்கிறோம். கீழூரில் 453 ஆண் வாக்காளர்களும் 449 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 902 வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிற்கு போதமலைக்கு நடைபயணமாக செல்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் புதுப்பட்டியில் உள்ள போதமலை அடிவாரத்தில் இருந்து மண்டல அலுவலர் கனகராஜ் தலைமையில் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தலைச்சுமையாக எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News